முகப்பு சினிமா அமைச்சருக்கு பாசிட்டிவ்.. கோரப் பிடியில் மும்பை.. மூன்றாம் கட்டத்தில் மகாராஷ்டிரா! #Corona

அமைச்சருக்கு பாசிட்டிவ்.. கோரப் பிடியில் மும்பை.. மூன்றாம் கட்டத்தில் மகாராஷ்டிரா! #Corona

கொரோனா நோய் கிருமியின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக வேகம் எடுக்க தொடங்கியிருக்கும் கொரோனாவால் இந்தியாவில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. நோய்த் தொற்றின் பரவலிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் முயற்சியாக இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய்த் தொற்றின் பரவலைத் தடுத்து பாதிப்பைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போதிலும், கொரோனா நோய்க் கிருமியின் தாக்கம் தணிந்த பாடில்லை. இன்னும் வீரியத்துடன் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

கோவிட் -19 கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா நோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 700 ஐ கடந்து சென்றுகொண்டிருக்கிறது, நாடு முழுவதும் 23,000 க்கும் மேற்பட்டோர் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியா முழுவதும் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் காணப்பட்டாலும் குறிப்பாக சில மாநிலங்களில்தான் நோய் பாதிப்பு மிகவும் அதிகமாக காணப்படுகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம்தான் இந்த நோயால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை மட்டும் 6,400 க்கும் மேற்பட்டோர் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல் இந்தியாவிலேயே கொரோனா நோய்க்கு அதிகம் பேர் இறந்துள்ளதும் அங்குதான். பலி எண்ணிக்கை 283 ஐ தாண்டி சென்றுகொண்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிரா கொரோனா நோய் தீவிரத்தில் மூன்றாம் கட்டத்தை எட்டியிருக்கிறது.

குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மற்றும் புனே பகுதிகளில்தான் கொரோனா மிக அதிகமாக உள்ளதாக அம்மாநில சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள 6,427 பேரில் 2 சதவிகிதம் அதாவது 120 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வார காலமாக கொரோனா அங்கு தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 778 பேருக்கு கோவிட்-19 நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு இது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல் மாநிலத்தில் கடந்த நான்கு நாள்களில் மட்டும் புதிதாக 2,000 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு அங்கு மொத்தம் 283 பேர் இறந்துள்ள நிலையில், அதில் 14 பேர் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இறந்துள்ளனர்.

மஹாராஷ்டிராவில் மும்பை பகுதியில்தான் கொரோனாவின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 522 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மகாராஷ்டிராவின் நோய் பாதிப்பு எண்ணிக்கையில் 65% வரை மும்பைப் பகுதி பங்கு வகிக்கிறது. மும்பைக்கு அடுத்த படியாக புனேவில் நோய் பாதிப்பு மிக மோசமாக இருக்கிறது. புனேவின் நந்தூர்பர் பகுதியைச் சேர்ந்த 32 வயது வணிகர் ஒருவர் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அடுத்த 24 மணி நேரத்தில் இறந்துள்ளது அப்பகுதி மக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மகாராஷ்டிராவில் நிலவும் இக்கட்டான சூழலைக் கருத்தில் கொண்டு நோய் தீவிரத்தைத் தணிக்கும் முயற்சிகளில் மத்திய அரசு தற்போது களம் இறங்கியிருக்கிறது. நேற்று மும்பைக்கு பிரத்யேகக் குழு ஒன்றினை அனுப்பிய மத்திய அரசு அங்கு நோய் பாதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி இருக்கிறது.

அதன் பேரில் நேற்று மும்பைப் பகுதியில் நோய் பாதிப்பு நிலவரத்தைக் கள ஆய்வு செய்த மத்திய குழு அம்மாநில அரசை எச்சரித்துள்ளது. இதே நிலை தொடரும் பட்சத்தில் பலியின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயரும் வாய்ப்பு உள்ளதாகவும், அதைக் கருத்தில்கொண்டு முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது. மாநிலத்தில் நோய் பாதிப்பு தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் காணொலிக் கலந்துரையாடல் மூலம் மாநில சுகாதாரத் துறையினர் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் உத்தவ் தாக்கரே நோய் தீவிரத்தைக் தணிக்கும் நடவடிக்கைகளை துரிதப் படுத்தவும், தனியார் மருத்துவமனைகள் கொரோனா பரிசோதனைகள் மறுக்காமல் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில வீட்டு வசதி துறை அமைச்சர் ஜிதேந்திர அவத்துக்கும் கொரோன நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார், முன்னதாக அமைச்சர் நோய் தொற்று அறிகுறிகளுடன் தன்னை தானே வீட்டில் 10 நாள்களாக தனிமைப்படுத்தியிருந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்த பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. அதே போல் அம்மாநிலத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக 96,000 பேரின் இரத்த மாதிரிகளையும் சுகாதார துறையினர் சேகரித்துள்ளனர்.

நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க அங்கு மொத்தம் 2,509 வென்டிலேட்டர்கள் மட்டும் பயன்பாட்டில் உள்ள நிலையில், மேம்படுத்த பட்ட மருத்துவ சிகிச்சைக்கு மேலும் 2,000 வென்டிலேட்டர்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளனர்.

Must Read

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு ‘பேட் நியூஸ்’

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி,...

வெட்டுக்கிளி கதையை முடிக்க ட்ரோன் அட்டாக்!

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்தியா செல்கிறது என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் ட்ரோன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த புது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான்...

`சீனாவின் மிகவும் மோசமான பரிசு!’ – கொரோனா விவகாரத்தில் மீண்டும் விமர்சித்த ட்ரம்ப்

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. இதுவரை அங்கு 17.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால்...

`இப்பதான் எங்களுக்கு நிம்மதி!’ -புதுக்கோட்டையில் கொரோனாவிலிருந்து மீண்ட ஒன்றரை வயது குழந்தை

உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ், இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், மே 31-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்று...

சமந்தாவை சீண்டினாரா பூஜா ஹெக்டே?

சமந்தா குறித்து பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியான பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தெலுங்கு திரையுலகில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு கதைக்கு...