முகப்பு சினிமா `உயிர்நாடியே உயிரற்றுப் போய்விட்டது!' - வாசகியின் ஆதங்கப் பகிர்வு #MyVikatan

`உயிர்நாடியே உயிரற்றுப் போய்விட்டது!’ – வாசகியின் ஆதங்கப் பகிர்வு #MyVikatan

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சூரியன் வறுத்தெடுத்துக்கொண்டிருக்கும் உச்சி வெயில் நேரமது. அவ்வேளையில் ஒரு போன் கால். ஒவ்வொரு அழைப்பின்போதும் டவருக்காக நான் படும்பாடு பெரும்பாடு. வீட்டுக்கு வெளியே வந்தும் சரிப்பட்டு வரவில்லை. நடந்து தென்னந்தோப்புக்குள் நுழைந்தேன். அப்படியே கொஞ்ச தூரம் நடைபோட்டும் நெட்வொர்க் அகப்படவில்லை.

கிராமத்துக்குள் டவர் கிடைக்கும் இடத்தைக் கண்டடைவது திருடன் போலீஸ் விளையாட்டு மாதிரிதான். எப்படியோ வாய்க்கால் மேட்டில் டவருடனான ஐஸ்பாய் விளையாட்டு முடிவுக்கு வந்தது. ஆடு மேய்க்க, மாலையில் பொழுதுகழிக்க இங்குதான் மக்கள் வருவார்கள். 20 மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. 10 பேர் நிழலில் கட்டையைச் சாத்தியிருந்தார்கள். அதில் ஒருவர் மட்டும் மாடுகளுடன் வாக்குவாதத்தில் இருந்தார். 90 வயதிலும் திடகாத்திரமாக இருக்கும் முதியவர். அந்தப் பகுதி இளவட்டப் பயல்கள் அவருக்கு வைத்த பெயர், பெரிய கடவுள். சுவாரஸ்யமான மனிதர். நானும் நிழலில் அமர்ந்துகொண்டு சண்டையை கவனிக்கத் தொடங்கினேன்.

Representational Image

“ஹேய்… ஹேய்… ஹேய்… ஒரு இடத்துல மேயணும் என்ன… இதுங்கல மேய்க்கிற நாம கஞ்சி குடிக்கிறோம். பால் விக்கிற விலைக்கு மாசம் 5 மூட்டை பஞ்சு, புண்ணாக்கு சாப்பிடுதுங்க…” என்று புலம்பிக்கொண்டிருந்தார். இதற்கு நடுவே, எங்க ஊர் பால்காரர் வந்துசேர்ந்தார்.

“யோவ்… என்ன ஒரே சத்தமா இருக்கு.”

“வாடா பணக்கார பால்காரா… உனக்கென்னப்பா, என்கிட்ட லிட்டருக்கு பால் 17 ரூபாய்க்கு வாங்கிட்டு, அதை 50 ரூபாய்க்கு விக்கிற.”

“இப்படிப் பொறாமையா பேசுனா கோவப்படுவேன் பார்த்துக்கிடுங்க. ஊருக்கு ஒரு சொசைட்டி (அரசு பால் கொள்முதல் நிலையம்) கட்டித் தரச் சொல்லணும். அதை விட்டுட்டு என்கிட்ட சீண்டி என்ன பயன்? இப்போவெல்லாம், வண்டிங்க ஓடுறது இல்ல. அதுனால, வாரத்துக்கு இரண்டு நாள் பால் போதும்னு சொல்லிட்டாங்க. நானுமே காசு இல்லாம கஷ்டப்பட்டுகிட்டுதான் இருக்கேன்.”

“நாயைக் கண்டா கல்ல காணோம், கல்லக் கண்டா நாயைக் காணோம் கதைதான். விலை இருக்குறப்போ காடு காஞ்சி கெடக்கும். கொஞ்சம் பச்சை இருந்தா விலை இருக்காது. அதை மீறி வெளச்சல் இருந்தா, இடையில இருக்குறவனுங்க லாபம் பார்த்திடுறாங்க. அதுசரி… இப்போ ஏதோ வியாதி வந்திருக்காமேடா?”

“அதுவா கிழவா… கொரோனா. ”

“இதுனால, காய்கறியெல்லாம் டவுன்ல அதிக விலைக்கு விக்கிறாங்களாமே? என் காட்டுல மார்க்கெட்காரன் சும்மா எடுத்துட்டுப் போனான்.”

`நாம பொழப்பே இப்படித்தான்.”

“அதைவிடு பால் பணத்தக் கொடு.”

“யோவ் இப்போதான் பேங்குக்கு போறேன். நைட்டு வந்து கொடுக்குறேன்.”

“அடேய், அப்படியே அரசு ஏதோ காசு தருதாமாம். என்னனு கேட்டுட்டு வாடா… பக்கத்து காட்டுக்காரன் வாங்கியிருக்கான்.”

“கேட்டுட்டு வாரேன்… ஆனா, நாம் கொடுக்குற பால் பணத்தைவிட கம்மியாதான் இருக்கும்” என்று நடையைக் கட்டினார் பால்காரர்.

Representational Image

“ஹேய் மாடே, நட உன்ன இழுத்து கட்டிட்டுதான் சோறு செய்யணும். என்ன வருது, போகுதுன்னு ஒண்ணும் புரியலை. ஹேய்… ஹேய்… ஹேய்.”

என்னுடைய சிறு வயதிலிருந்தே இந்தத் தாத்தாவைப் பார்க்கிறேன். அன்றிலிருந்து இன்றுவரை எந்த மாற்றமும் இவர் வாழ்க்கையில் நடந்ததாகப் பார்த்ததில்லை. எல்லா விவசாயிகளுக்கும் இந்நிலை வருவதில்லை. ஆனால், நாட்டில் பாதிக்கும் மேல் விவசாயிகள் வாழ்க்கையின் ஒற்றைச் சான்று பெரிய கடவுள் தாத்தா.

பயிரிடுவதில் தொடங்கி அறுவடை வரை வெப்பம், மழை, காற்று, பனி, நோய் இன்னும் பல இடர்பாடுகளிலிருந்து பயிர்களைக் காத்தாக வேண்டும். இப்படி விளைவிக்கப்படும் பொருள்களிலிருந்து பெரும் லாபத்தை விவசாயிகளை விட, இடைத்தரகர்களே அதிகம் ஈட்டுகிறார்கள். இப்போது, நாட்டில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், நகர்ப்புறங்களில் காய்கறி விலை அதிகமாக உள்ளது. ஆனால், விவசாயிகளிடம் குறைந்த விலைக்கே கொள்முதல் செய்யப்படுகிறது. சில இடங்களில் விளைத்த பொருள்கள் வீணாகிவிடக் கூடாது என்பதற்காகப் பணம் வாங்காமல் வியாபாரிகளுக்கு கொடுக்கிறார்கள் விவசாயிகள். ஆனால், பொதுமக்களுக்கு இலவசமாகவா கிடைக்கிறது?

Representational Image

பக்கத்துக் கிராமத்தில் கடந்த வாரம் பீட்ரூட் கிழங்குகள், போக்குவரத்துச் செலவு பிடித்தம் போக கிலோ 4 ரூபாய்க்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால், அதே கிழங்கை, 5 கிலோ மீட்டர் தள்ளி ஒரு கிராமத்தில் கிலோ 12 ரூபாய்க்கு விற்றுள்ளனர். இதில் வாழை மற்றும் தக்காளிக்கு வந்த நிலைமையே வேறு.

வருடம் முழுவதும் பார்த்து விளைவிக்கப்படும் பயிர்கள் மழையால் சேதமடைந்தால் நிவாரணம் கிடைக்கும் என்று பார்த்தால், அதிலும் இடைத்தரகர்களுக்கே முக்கியப் பங்கு.

விவசாயப் பொருள்களை கொள்முதல் செய்து, விற்பனைக்கு கொண்டு வந்தால் 5 லட்சம் வரை லோன் தரப்படும் என அரசு அறிவித்திருந்தது. சிறு விவசாயிகளிடம் சரக்கு வாகனங்கள் மிகக் குறைவு, ஊரடங்கு காரணமாகத் தனியார் வாகன உரிமையாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். இதனால் விவசாயிகள் கொள்முதல் செய்வதில் பல சிக்கல்கள் உள்ளன. வியாபாரிகளும் மார்க்கெட்டுக்கு அருகில் உள்ள கிராமங்களில் மட்டுமே அதிக கொள்முதல் செய்கின்றனர். பல கிராமங்களில் கொள்முதல் செய்வதற்குள், விளைபொருள்கள் அழுகியும் காய்ந்தும் போய்விடுகின்றன.

விவசாய அமைப்பு மற்றும் தனியார் கம்பெனிகள் இணைத்து, மொபைல் அப்ளிகேஷன் மூலம் வாகன வசதி செய்து கொடுக்கின்றனர். ஆனால், அனைத்து விவசாயிகளும் டெக்னாலஜியில் அனுபவம் பெற்றவர்கள் அல்ல. இதற்கும் அரசாங்கமே மாற்று ஏற்பாடு செய்தால் கொஞ்சம் இழப்பை தவிர்க்க முடியும்.

Representational Image

மேலும், அரசு சேமிப்பு கிடங்கில் விவசாயப் பொருள்களை சேமித்து வைக்கலாம் என அரசு கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், எல்லா கிராமங்களிலும் சேமிப்புக் கிடங்கு அருகில் இருக்க வாய்ப்பில்லை. அதனால் போக்குவரத்து சிக்கல்கள் உண்டாகும்.

ஆக, விவசாயப் பொருள்களுக்கு தடை நீக்கப்பட்டு, கொள்முதல் செய்ய உதவிக்கு தொலைபேசி எண்ணும் அரசு கொடுத்துள்ளது. ஆனால், கொள்முதல் இயல்பு நிலைக்கு வரவில்லை. இதற்கு காரணம் விவசாயிகளின் அறியாமையா, இடைத்தரகர்களின் அரசியலா அல்லது அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதா..? சிந்திக்க வேண்டிய நேரமிது…

அடுத்த போன் காலுக்கு காத்திராமல் சிந்தித்தவாறே விறுவிறுவென வீட்டுக்கு நடையைக் கட்டினேன்.

சரண்யா ஜெ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Must Read

ஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்டாட்டங்களில் கொரோனா தொற்று!

ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்று பெரிய கொண்டாட்டங்களில் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 20 அகவை இளைஞன் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதேவேளை தொற்று பலருக்கு இருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்களோடு நெருங்கிய தொடர்பில்...

வுகானில் மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, வுகான் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ஜாங்னான் மருத்துவமனை ஆய்வு நடத்தி உள்ளது. இதன் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில், ‘கொரோனாவில் இருந்து மீண்ட...

கொரோனா கதியில் இருந்து மீண்டதா? இன்னமும் திணறுகிறது அமெரிக்கா: டிரம்ப் மீது மக்கள் கடுப்பு

நியூயார்க்: மற்ற நாடுகளை விட அமெரிக்கா கொரோனா ஒழிப்பில் வெற்றி கண்டு கொண்டிருக்கிறது என்று அதிபர் டிரம்ப் என்னதான் சொன்னாலும், உண்மையில் நிலைமை வேறாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் கொரோனா பரவியுள்ளது...

BREAKING NEWS சற்று முன் ஸ்பெயின் லாக் டவுன் அறிவித்தது: ஐரோப்பா ஆட்டம் கண்டது: ஜேர்மனி பிரான்ஸ் கிரீஸ் எல்லாம் கொரோனா

ஐரோப்பிய நாடுகள் மீண்டும் ஆட்டம் கண்டுள்ளது. சற்று முன்னர் ஸ்பெயின் நாட்டில் பல இடங்களில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இது போக ஜேர்மனில் பல நகரங்களில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு...

கொரோனாவிலிருந்து மீண்டுவருபவர்கள் மனநல கோளாறால் பாதிக்கப்படுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

கொடிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து மீண்டுவருபவர்கள் மனநல கோளாறால் பாதிக்கப்படுகின்றனர் என புதிய ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கின்றது. இது வைரஸின் நீடித்த உளவியல் விளைவுகள் குறித்து தீவிர கவலைகளை எழுப்புகிறது என்று புதிய...