முகப்பு சினிமா காக்கா குளியல்னா என்ன.. மூஞ்சூரை கொன்னா தலைவலி வருமா? -கிராமத்து மொழி உணர்த்தும் பாடம் ...

காக்கா குளியல்னா என்ன.. மூஞ்சூரை கொன்னா தலைவலி வருமா? -கிராமத்து மொழி உணர்த்தும் பாடம் #MyVikatan

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஒரு நாட்டின் மிகப்பெரிய இலக்கிய சொத்தாகப் பார்க்கப்படுபவை நாட்டுப்புறக் கதைகளே. குழந்தைக்குக் கதை சொல்லும்போதுகூட காகம் வடை சுட்ட கதை, நரி கதை, ஆமை முயல் கதை என எண்ணற்றவற்றைச் சொல்கிறோம். இவையெல்லாம் வாய்மொழியாக அடுத்த தலைமுறைக்கு வழிவழியாய்ச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இளம் தலைமுறையினர் புனைவு, மொழிபெயர்ப்புக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை நாட்டுப்புற இலக்கியங்களைப் படிக்கச் செலவிடுவதில்லை. இவை அனைத்தும் முன்னோர்கள் நமக்களித்த பொக்கிஷங்கள்.

நாட்டுப்புறக்கதைகளை 19 வகையாகப் பிரிக்கலாம் என்கிறார் கி.ரா. பல்வேறு தலைப்புகளில் உண்மையும் நகைச்சுவையும் மிகுந்தவையாகக் காணப்படுகிறது. படிக்காதவர் முதல் படித்தவர் வரை தான் கண்டு கேட்டு உய்த்த விஷயங்களை அடுத்தவர்க்குக் கொடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

Representational Image

கதை கேட்டலும், கதை சொல்லலும் அன்றைய மக்களின் கற்பனை வளத்தைப் பெருக்கின. தமிழ் நாட்டுப்புறக்கதைகளின் பிதாமகராக கி.ராஜநாராயணனையும் அவரின் சீடரான கழனியூரனையும் குறிப்பிடலாம். விடுகதைகள், பாலியல் கதைகள் மற்றும் பெரும் தொகுப்பாக நாட்டுப்புறக்கதை களஞ்சியத்தையும் தொகுத்துள்ளனர். இதைப் படிக்கும்போது வித்தியாசமான வாசிப்பின்பத்தை உணரலாம்.

#நாடோடிக்கதை

`பாமர மக்கள் தங்களைத் தாங்களே கேலி செய்த கதைகளும் உண்டு’ என்பார் கி.ரா. அவர் உதிர்த்த நாடோடிக்கதை..

பிரிட்டிஷ் பார்லிமென்ட்டில், ` நெல் எந்த மரத்தில் காய்க்கிறது?’ எனக் கேள்வி வருகிறது. பதில் தெரியாததால் இந்திய மந்திரி வைஸ்ராய்க்கு தகவல் அறிய அனுப்புகிறார். அவருக்கும் தெரியாததால் அப்படியே படிப்படியாக கவர்னர், கலெக்டர், தாசில்தார், கிராம முன்சீப் என வந்து கடைசியாய் தலையாரியிடம் வருகிறது. பயந்துபோன அவர் கள்ளுக்கடையில் குடித்துவிட்டு வரும்போது பனைமரம் முட்டி கீழே விழுகிறார். உடனே பனைமரத்தில் தான் நெல் காய்க்கிறது என அனுப்ப அது வரிசையாய் மேலே சென்று பார்லிமென்டிலும் நெல் பனைமரத்தில் காய்ப்பதாக முடிகிறது.

Representational Image

#தற்காலத்துக்குப் பொருந்தும் கதை

`இருந்த இடத்தில் இருக்கும்போது உலகம் உன்னை மதிக்கும், உன் நிலைமை கொஞ்சம் இறங்கிவந்தால் நிழலும்கூட மிதிக்கும்’ என்பார் கவியரசர்.

அவ்வகையில் ஒரு தாசில்தார் கிணறு வெட்டுவதைப் பார்க்க கிராமத்துக்குச் சென்றபோது.. தவறி கிணற்றில் விழுந்துவிடுகிறார். ஊர் மக்கள் பதறியடித்து கட்டில் வைத்து தூக்கிக்கொண்டிருக்கும்போது பியூன் ஒருவன் வேகமாய் ஓடிவருகிறார். நமக்குப் புது தாசில்தார் வரப்போகிறாராம், இவரை மாற்றிவிட்டார்கள் என்றவுடன் அப்படியே கட்டிலை கிணற்றில் விட்டுவிட்டுப் போவதாக கதை முடியும். இது இன்றைக்கும் பொருந்தக் கூடியதாய் இருக்கிறது.

#காக்கா குளியல்

கிராமியப் பழமொழிகள் பன்னெடுங்காலமாக சொல்லப்பட்டவை. அவற்றில் காக்கா போல் குளி என்று ஒரு பழமொழி இருக்கு. காக்கா குளிப்பு குளித்தேன் என்பது கிராமத்து வழக்கு. காகம் தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் குளிக்கவும் செய்யாது, தேங்கிக் கிடக்கும் தண்ணீரையும் குடிக்காது. நீர்க் காக்கைதான் தேங்கிக் கிடக்கும் ஏரித்தண்ணீரில், குளித்துத் தண்ணீரில் முங்கி, முக்குளித்து மீன் பிடிக்கும். ஆனால் சாதாரண காக்கைகள் தேங்கிய தண்ணீரில் குளிக்காது.

ஓடுகின்ற தண்ணீரில் உப்பு இருக்காது. நல்ல தண்ணீராகத்தான் இருக்கும். “ஓடைத் தண்ணி உப்புத் தண்ணி ஆகாது” என்கிறது ஒரு நாட்டுப்புறப்பாடல். ஆக, காக்கையைப் போல் ஓடுகிற நீரில் குளித்தால் நோய் வராது நமக்கு. இனி காக்கா குளியல்னு சொல்லும் முன் யோசிங்க மக்களே!

Representational Image

#வெற்றிலை

வெற்றிலை பயன்பாடு இன்றைக்கும் மக்களிடம் உண்டு. தாம்பூலத்தில் வைக்க, வரவேற்க, பெண் பார்த்து வெற்றிலை மாற்ற, மொய் வைக்க, ஆரத்திக்கு, இன்னும் பல வகையில் பயன்படுத்துகிறோம். அதேபோல் கன்னிப்பெண்ணின் இரண்டாம் தார மணத்தைப் பாட வெற்றிலை பாட்டு ஒன்று உண்டு.

சவத்தை சுடுகாட்டுக்கு அனுப்பும்போது இடது கையில் வெற்றிலை வைத்து அனுப்புவார்கள். அந்த வெற்றிலையைச் செத்தவன் கை பிடிக்காது என்பதால் இடது கையின் கீழே வெற்றிலையை வைப்பார்கள். இதைச் சொல்லும் மரபுத்தொடர்தான் “செத்தவன் கையில் வெத்தலை கொடுத்தது போல”என்பார்கள். அதாவது கவனமின்றிச் செய்யும் செயலுக்கு இதைச் சொல்வார்கள் இன்று.

அதே போன்று சமுதாயத்தில் சாவு நிகழ்ந்த வீட்டில் பறை ஒலி எழுப்புவார்கள். இதற்கு சாவுப் பறை என்று பெயர். இது ஒரே சுதியில் இல்லாமல் முதலில் இறந்த செய்தியை ஊராருக்கு அறிவிக்கவும், மாமன் கோடி வரும்போதும், குளிப்பாட்டும் போதும், இறுதி ஊர்வலம் போகும் போதும்.. என நுணுக்கமான வேறுபாட்டுடன் அடிப்பார்கள். இதை வைத்து என்ன சடங்கு நடக்கிறது என்பதை ஊர் மக்கள் கேட்டு அறிந்து கொள்வார்கள். கிறித்துவ சமயத்திலும் துக்க செய்தியை தேவாலய மணி மூலம் தெரியப்படுத்துவார்கள். ஊரில் குழந்தை இறந்தால் 3 தட்டு, பெண் இறந்தால் 4, ஆணுக்கு-5 அவ்வூர் பங்குத்தந்தை இறந்தால் 6, மறைமாவட்ட கத்தோலிக்க குரு இருந்தால் 7 மணி அடிப்பார்கள். அன்றைய கிராமத்தில் இதெல்லாம் வழக்கமாய்ச் செய்திருக்கிறார்கள் என அறியமுடிகிறது.

Representational Image

#சொலவடைகள்

கிராமத்தில் எளிய மொழியில் காலங்காலமாக சொல்லப்பட்டவை சொலவடைகள். எள்ளல் தொனியும் உண்மைகளும் அதில் இருக்கும்.

*பாடுபட்டவனுக்குப் பத்துப் பல்லாம் இளிச்சவாயனுக்கு இருபது பல்லாம்.

வேலை செய்தவர்களைவிட வேலை செய்யாதவர்க்கு அதிக பலன் அடைவதாக..

*ஆனவனுக்கு புத்தி சொன்னா அறுவும் உண்டு நினைவும் உண்டு ஈனனுக்கு புத்தி சொன்னா இருக்கும் இடத்தையும் தோத்துதான் போகணும் என அறிவுரை யாருக்கு சொல்வதென்று வந்த சொலவடை

*பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதையாய் இருந்தால் எக்காலமும் கூடிவாழலாம். சற்று ஏறுமாறாக இருந்தால் கூறாமல் சந்நியாசம் போய்விடலாம் என இல்லற தம்பதி குறித்து சொல்வார்கள்

Representational Image

*உழுகிற மாடும் , உள்ளூர் மருமகனும் ஒன்றுதான்

*வேலையைத் தள்ளிப்போடுகிற மனப்பான்மைக்கு ஒரு சொலவடை…- “செல்வியக்கா புருசன் செவ்வாக்கிழமை செத்தானாம்,

வீடு வெறிச்சோடி போய்டுமேனு, வெள்ளிக்கிழமதான் எடுத்தாளாம்”

*ஏர் உழறவன் ஏமாளியா இருந்தா மாடு மச்சான் னு கூப்டுமாம்

*தென்னையை வச்சவன் தின்னுட்டு செத்தான், பனையை வச்சவன் பாத்துட்டு செத்தான்

*சின்ன மச்சான், குனிய வெச்சான் -நெருஞ்சி முள்

*நடந்தா நாடெல்லாம் உறவு

படுத்தா பாய் கூட பகை.

*தாகத்துக்கு தண்ணி கேட்டா குழிமேட்டுல வந்து ஊத்தின கதையா இருக்கே

*கம்பங்கதிரை கண்டா கை சும்மாயிருக்காது, மாமன் மகளை கண்டால் வாய் சும்மாயிருக்காது.

*உள்ளூர்ல உதை வாங்காத

வெளியூர்ல விதை வாங்காத..

என்பன போன்ற சொலவடைகளை ரசித்துப் படிக்கலாம்

Representational Image

#அனுபவமொழிகள்

கடவுள் மனிதனுக்கு சொன்னவை பகவத்கீதை. மனிதன் கடவுளுக்கு சொன்னது திருவாசகம். மனிதன் மனிதனுக்கு சொன்னது திருக்குறள் என்பார்கள். அதில் நாட்டுப்புற கதைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். அந்த வகையில் சக மனிதனுக்கு சொன்னவை சில

*உச்சி வெயில் நேரத்தில் எண்ணை தேய்த்து குளிக்கக் கூடாது. இதனால் சூரியனின் ஒளிக்கதிர்கள் உடம்பின் நரம்புகளைத் தாக்கும.

*மூஞ்சூரை கொன்றால் தலைவலி வரும். மூஞ்சூறு அரிய உயிரினம் கொல்லக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் சொல்லப்பட்டது.

*சுடுகாட்டில் பிணம் எரியும் புகையை சுவாசிக்கக் கூடாது. அதில் அதிகப்படியான கார்பன் உள்ளது.

*வெறும் உரலை ஆட்டக் கூடாது. அதனால் உரலின் உட்புறம் உள்ள கல் கரையும். அதிகமான சத்தம் ஏற்படும்.

* உள்ளங்கையில் படாமல் சாப்பிடுவது உறவுக்கு நல்லது ஏனெனில் உள்ளங்கையில் உள்ள அழுக்கு வயிற்றின் செல்லாமல் இருக்கும் என்பதால்.

*சிவப்பு எறும்பு சாரிசாரியாக வந்தால் வீட்டிற்கு ஆகாது. ஏனெனில் வீட்டில் குப்பைக் கூளங்கள் இருந்தால்தான் சிவப்பு எறும்பு சாரிசாரியாக வரும்.

* நின்று கொண்டு சிறுநீர் கழிக்கக் கூடாது அவ்வாறு கழிக்கும்போது அந்தத் துளிகள் தெறித்து காலில் படுவதால் நோய்கள் தோன்றும்.

இதுபோல் இன்னும் அனுபவ மொழிகளை நாட்டுப்புறக் கதைகள் படிக்கும்போது காணலாம்.

Representational Image

#பொக்கிஷங்கள்

நாட்டுப்புறக் கதைகள் ஏதோ ஒரு மொழியில் இருந்து மொழிபெயர்த்தவையோ நான்கு சுவருக்குள் எழுதியதோ அல்ல. அவை முன்னோர்கள் நமக்கு அளித்த கொடைகள். வாழ்வியல் உண்மைளை ஊர்தோறும் சென்று சேகரித்தவர்கள் நம் வணக்கத்திற்குரியவர்கள். எழுதப் படிக்க தெரியாதவர்கள்கூட தன் அனுபவ ஞானத்தை அடுத்த தலைமுறையினருக்குக் கொடுத்த பொக்கிஷங்கள்.

வாசிப்பில் உச்சம் தொட எண்ணுகிறவர்கள் மேலை நாட்டு இலக்கியங்களுடன் நம் நாட்டு மண்ணின் கதைகளையும் படிக்க வேண்டும். ஏனெனில் இவை நம் வாழ்வியலைக் கூறுபவை. அடுத்தமுறை கண்காட்சிக்கு வாங்கவிருக்கும் புத்தகப் பட்டியல் தயாரிக்கும்போது நாட்டுப்புறக் கதைகளையும் வாங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

ஏனெனில் அவை நம் முன்னோர்களின் வாழ்வியலைச் சொல்லும் கலைக் களஞ்சியங்கள்.

மணிகண்ட பிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

Must Read

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு ‘பேட் நியூஸ்’

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி,...

வெட்டுக்கிளி கதையை முடிக்க ட்ரோன் அட்டாக்!

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்தியா செல்கிறது என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் ட்ரோன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த புது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான்...

`சீனாவின் மிகவும் மோசமான பரிசு!’ – கொரோனா விவகாரத்தில் மீண்டும் விமர்சித்த ட்ரம்ப்

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. இதுவரை அங்கு 17.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால்...

`இப்பதான் எங்களுக்கு நிம்மதி!’ -புதுக்கோட்டையில் கொரோனாவிலிருந்து மீண்ட ஒன்றரை வயது குழந்தை

உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ், இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், மே 31-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்று...

சமந்தாவை சீண்டினாரா பூஜா ஹெக்டே?

சமந்தா குறித்து பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியான பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தெலுங்கு திரையுலகில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு கதைக்கு...