முகப்பு சினிமா தஞ்சை: ஆன்லைனில் ஜமாபந்தி நடத்துவது நியாயமா? -சமூக ஆர்வலர்கள் ஆதங்கம்

தஞ்சை: ஆன்லைனில் ஜமாபந்தி நடத்துவது நியாயமா? -சமூக ஆர்வலர்கள் ஆதங்கம்

ஜமாபந்தி: 

மக்களின் முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண, மன்னர்கள், ஆங்கியேர்கள் ஆட்சிக்காலம் எனத் தொன்று தொட்டு, ஆண்டுதோறும் ஜமாபந்தி நடத்தப்பட்டு வருகிறது. அரசு அலுவலர்களால் நீண்டநாள்களாக இழுத்தடிக்கப்படும் மக்களின் கோரிக்கைகளுக்கும் புகார்களுக்கும் ஜமாபந்தியில் பெரும்பாலும் தீர்வு கிடைத்துவிடும்.

இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியானது, கிராமப்புற மக்களுக்கு முறையாகத் தெரிவிக்கப்படவில்லை. மேலும் மக்கள் தங்களது மனுக்களை ஜமாபந்தி கூட்டத்தில் நேரடியாகச் சமர்ப்பிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். இதனால் ஜமாபந்தியின் அடிப்படையான நோக்கம் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கிறார்கள்.

வீரசேனன்

தமிழ்நாட்டில் பல நூறு ஆண்டுகளாக, ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. என்னதான் விதவிதமாக ஆட்சிகள் மாறினாலும், ஜமாபந்தி நடைபெறாமல் இருந்ததே இல்லை. இதில் அனைத்துத் துறை அதிகாரிகளும் கட்டாயம் கலந்து கொள்வார்கள். ஜமாபந்தி என்பது இந்தி சொல் என்பதால், தி.மு.க ஆட்சிக்காலத்தில் இது, வருவாய் தீர்வாயம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வருவாய்த்துறை உயர் அலுவலர் தலைமையில் தாலுகா தோறும் இக்கூட்டம் நடைபெறும். இக்கூட்டம் நடைபெறுவது, வீடுகள்தோறும் முன்கூட்டியே தெரிவிக்கப்படும். மக்கள், தங்களது மனுக்களோடு ஜமாபந்திக்கு வருவார்கள். அங்கேயே பரிசீலிக்கப்பட்டு தீர்வு காணப்படும்.

ஆனால் இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் நடத்தப்பட்டு வரும் ஜமாபந்தியில் பல்வேறுவிதமான குளறுபடிகள் உள்ளதாகவும் இதனால் மக்களுக்குப் பல்வேறுவிதமான பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்படுகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வீரசேனன், ‘’விவசாயிகளுக்கு, ஜமாபந்தி ரொம்பவே உதவியாக இருக்கும். வாய்க்கால்கள், ஏரி, குளங்கள்ல ஏதேனும் ஆக்கிரமிப்புகள் இருந்து, பாசனத்துக்குத் தண்ணீர் வரலைனா, இங்க மனு கொடுப்பாங்க. பெரும்பாலும் இதுக்குத் தீர்வு காணப்படும். இயல்பாக மற்ற நாள்கள்ல பட்டா பெயர் மாற்றம், கூட்டுப்பட்டாவுல இருந்து, தனிப் பட்டா வாங்குறதெல்லாம் சாதாரண காரியமல்ல. சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள், இழுத்தடிச்சிக்கிட்டே இருப்பாங்க.

மக்களுக்கே தெரியல…!

ஆனால் ஜமாபந்தியில் முறையிட்டால், உடனடியாகத் தீர்வு காணப்படும். மாற்றுத்திறனாளிகள், விதவைகள், ஆதரவற்ற முதியோர்கள் உட்பட இன்னும் பல எளிய மக்கள், அரசின் சலுகைகளைப் பெறவும் ஜமாபந்தி உதவியாக இருக்கும். இதுக்கான முன் அறிவிப்பை, ஊர் தலையாரி, வீடுகள்தோறும் தெரிவிச்சி,கையெழுத்து வாங்குவார். தாலுகா அலுவலகத்துல பத்து நாள்கள் இது நடைபெறும். ஒவ்வொரு நாளும், ஒரு வருவாய் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மனு கொடுப்பாங்க. இறுதி நாள்களுக்குள் தீர்வு காணப்படும். ஆனால் இந்த ஆண்டு தஞ்சை மாவட்டத்துல இதுல ஏகப்பட்ட குளறுபடிகள்.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

ஜமாபந்தி நடத்தப்படுவது மக்களுக்கு தெரிவிக்கப்படல. பட்டுக்கோட்டை தாசில்தார் ஆபீஸ் பக்கம், யதார்த்தமாகப் போனேன். வழக்கத்தை விட, அதிகாரிகளின் கூட்டம் பல மடங்கு அதிகமாக இருந்துச்சு. சுமார் முந்நூறு பேர் இருந்தாங்க. ஏதோ பிரச்னைனு நினைச்சி, விசாரிச்சப்பதான், ஜமாபந்தி நடக்குதுனு சொன்னாங்க. ஆனால் பொதுமக்கள் ஒருந்தர் கூட இல்லை. மக்கள் நேரடியாக மனு கொடுக்க அனுமதி இல்லை. ஆன்லைன்ல மட்டும்தான் கொடுக்க முடியும்னு சொன்னாங்க. கிராமப்புற மக்களுக்கு இது சாத்தியமே இல்லை. மக்கள் முன்னிலையில் மனுக்களை பரிசீலிச்சாதான் உடனடியா தீர்வு, கிடைக்கும். கொரோனாவைக் காரணம் காட்டி, இதுமாதிரி செஞ்சிருக்காங்க. ஆனால், மூணு பீர்காவைச் சேர்ந்த அனைத்துத் துறை அதிகாரிகளும், ஒரே நாள்ல, பட்டுக்கோட்டை தாலுகா ஆபீஸ்ல கூடியிருக்காங்க. இன்னும் பல அரசு நிகழ்ச்சிகள் கூட்டம் கூட்டமாக நடந்துக்கிட்டுதான் இருக்கு. ஆனால் சாமானிய மக்களின் நீண்டகாலப் பிரச்னையை எளிதாகத் தீர்க்கக்கூடிய ஒரே வாய்ப்பாக இருந்த ஜமாபந்தியில் கை வச்சிட்டாங்க. முறையாக மக்களுக்குத் தெரிவிச்சி, சமூக இடைவெளியைக் கடைப்பிடிச்சி, இதை நடத்தியிருக்கலாம்” எனத் தெரிவித்தார்.

வருவாய்த்துறை அலுவலர்களிடம் பேசியபோது ‘’கொரோனா பிரச்னை பூதாகரமாக இருக்கு. இதனால்தான் நாளிதழ்கள்ல அறிவிப்பு வெளியிட்டு, ஆன்லைன்-ல மனுக்கள் அனுப்பச் சொன்னோம். தமிழக அரசின் வழிகாட்டுதல்படிதான் செயல்படுகிறோம்” எனத் தெரிவித்தார்கள்.

ஆட்சியர் கோவிந்தராவ்

இது குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவிடம் பேசியபோது, “பொதுவா, ஜமாபந்தி பெரிய அளவுல நடக்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனாவால், தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, மனுக்களை ஆன்லைன்ல அனுப்ப சொன்னோம். இதுகுறித்த அறிவிப்புகளை பத்திரிகைகளில் வெளியிட்டு இருக்கிறோம். சமூக இடைவெளியை கடைப்பிடித்து, நேரடியாக மனுக்களை வாங்குவதில் வேறு சில சிரமங்கள் உள்ளது. வருவாய்த்துறை அலுவலர்கள் பெரும்பாலானோர், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வர்றாங்க. கொரோனா பிரச்னையால், போக்குவரத்து வசதிகள் இயல்பு நிலையில் இல்லை. ஜமாபந்திக்கு நேரடியாக வர மக்களும் சிரமப்படுவாங்க. மனுக்கள் ஆன்லைன்ல பெறப்பட்டாலும், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தார்.

Must Read

இந்தி நடிகை திவ்யா சவுக்சே: புற்றுநோயால் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் நடிகை திவ்யா சவுக்சே (28). நடிகையான பின்னர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் திவ்யா சவுக்சே வசித்து வந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் ஹை அப்னா...

வாழ்த்துங்களேன்!

14.7.20 முதல் 27.7.20 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத...

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...