முகப்பு சினிமா மரணிக்கும் மருத்துவர்கள்... மரித்துப் போன மனிதம்... கொரோனாவால் தமிழகத்தின் முகம் மாறுகிறதா?

மரணிக்கும் மருத்துவர்கள்… மரித்துப் போன மனிதம்… கொரோனாவால் தமிழகத்தின் முகம் மாறுகிறதா?

எந்தத் தென்னிந்திய மாநிலத்திலும் நிகழாத, வெட்கப்படக் கூடிய நிகழ்வுகள் கொரோனா காலத்தில் , தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தவர்களின் உடலை தாங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள மயானங்களில் புதைக்கக் கூடாது என்று சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கொரோனா பாதித்து இரு நாள்களுக்கு முன், சைமன் என்ற நரம்பியல் மருத்துவர் உயிரிழந்தார். இவரின் உடலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கிறிஸ்தவர்களுக்கான மாநராட்சிக்குச் சொந்தமான கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர்.

தகவல் பரவியதும் கீழ்ப்பாக்கம் பகுதி மக்கள், ‘மருத்துவரின் உடலை இங்கே புதைக்கக் கூடாது’ என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சுகாதாரத்துறை ஊழியர்கள் மருத்துவரின் உடலை அண்ணா நகர் தாண்டி உள்ள வேலங்காடு சுடுகாட்டுக்கு 11.30 மணியளவில் கொண்டு சென்றனர். மருத்துவரின் உடலுடன் அவரின் மனைவி மற்றும் நெருங்கிய நண்பரும் டாக்டருமான ப்ரதீப் என்பவரும் சென்றுள்ளனர். வேலங்காடு மயானத்திலும் மருத்துவரின் உடலைப் புதைக்க அந்தப் பகுதி மக்கள் அனுமதிக்கவில்லை. அதோடு, உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் டிரைவர், சுகாதாரத்துறை ஊழியர்களையும் மக்கள் தாக்கினர்.

Doctors death

இந்தச் சம்பவத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் மண்டை உடைந்து போனது. தொடர்ந்து, வேலங்காடு சுடுகாட்டிலிருந்தும் மருத்துவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. மருத்துவரின் நண்பர் பிரதீப்புக்கு இந்தச் சம்பவம் மனதளவில் பெரிய காயத்தை ஏற்படுத்தியது. இறந்துபோன தன் நண்பரின் உறவினர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டு, மண்டை உடைந்த டிரைவரையும் மருத்துவமனைக்கு அனுப்பினார் டாக்டர் பிரதீப். பிறகு அவரே ஆம்புலன்ஸை ஓட்டிக்கொண்டு இரு சுகாதாரப் பணியாளர்கள் உதவியுடன் மீண்டும் வேலங்காடு சுடுகாட்டுக்குத் தன் நண்பரின் உடலை எடுத்துக் கொண்டு சென்றார். பின்னர், பாதுகாப்பு உடைகளை அணிந்துகொண்டு, நண்பரின் உடலைப் புதைத்துள்ளார். வேலங்காடு சுடுகாட்டில் புதைக்கப்பட்ட மருத்துவரின் உடலுடன் தமிழகத்தின் மானமும் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு விட்டது என்பதைத்தான் இந்தச் சம்பவம் காட்டுகிறது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தைக் காட்டிலும் தமிழகம்தான் மனிதாபிமானமிக்க மக்கள் நிறைந்த மண்ணாகப் பார்க்கப்படுகிறது. லத்தூரில் பூகம்பம் ஏற்பட்டாலும் சரி…. அண்டை மாநிலங்களில் வெள்ளம் உருவானாலும் சரி… முதல் மாநிலமாக தமிழக அரசும் தமிழக மக்களும்தான் கைகொடுக்க முன்வருவார்கள். நிதியை வாரி வழங்குவார்கள். வட இந்தியர்கள் இன்று தமிழகத்தில் சாரை சாரையாக வந்து குடியேறுவதற்குக் கூட வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத பாதுகாப்பை இந்த மண்ணில் அவர்கள் உணருவது மட்டுமே காரணம்.

வேலங்காட்டில் டாக்டர். சைமன் புதைக்கப்பட்ட இடம்

ஆனால், கொரோனா நோய் காரணமாக தமிழக மக்களின் முகம் மாறிவிட்டதோ என்று நம்பக்கூடிய அளவுக்கு, தொடர்ச்சியாக கொரோனாவால் இறக்கும் மருத்துவர்களைப் புதைப்பதற்கு தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. முதலில் ஆந்திர மருத்துவர், அடுத்து தெங்குமரஹாடா மருத்துவர் ஜெயமோகன், இப்போது டாக்டர் சைமன். இந்தப் பட்டியல் இனிமேலும் நீடிக்கக் கூடாது என்பதே நமது விருப்பம்.

Also Read: 1,500 கொடிய கிருமிகள் – வுகான் வைரலாஜி மையத்தின் மர்மம்: சீனாவுக்கெதிராக சி.ஐ.ஏ-வை ஏவிய அமெரிக்கா!

‘சமூக விலகலைக் கடைப்பிடியுங்கள்; வீட்டை விட்டு வெளியே வராதீர்கள்’ என்று அரசு அறிவுறுத்தினால், எச்சரிக்கைகளை உதாசீனப்படுத்தி விட்டு கூட்டம் கூட்டமாகச் சுற்றித்திரியும் மக்கள், இல்லாத ஒரு விஷயத்தைக் கற்பனை செய்துகொண்டு கூட்டம் கூடி போராட்டம் நடத்துவது அருவருக்கத்தக்கது.

இந்தச் சம்பவம் குறித்து பாரதிய ஜனதா கட்சி தலைவர் திருப்பதி நாராயணனிடம் பேசினோம்: ”ஒரு மனிதரின் கடைசி யாத்திரையைத் தடுத்து நிறுத்தி, இறந்த பிறகும் கூட அவருக்கு இந்த மக்கள் தீங்கிழைத்துள்ளனர். காட்டுமிராண்டித்தனமான இந்தச் சம்பவம் மன்னிக்க முடியாத குற்றம். டாக்டர் உடலைக்கொண்டு சென்றவர்களை தாக்கியவர்கள் யார் என்று அடையாளம் கண்டு தண்டிக்கப்பட வேண்டும். பேரிடர் காலத்தில் உதவியாக இருந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யாமல் தடுத்து ஊறுவிளைவித்த அனைவரின் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை போன்வற்றைப் பறிக்க வேண்டும். இதற்கான, சட்டங்கள் இல்லையென்றால், அப்படிப்பட்ட சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். இது போன்ற காரியங்களில் ஈடுபடுபவர்களைத் தனிமைப்படுத்தி, கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீதும் வழக்கு பாய வேண்டும். முதல் குற்றவாளிகள் அவர்கள்தான். கீழ்ப்பாக்கத்திலேயே காவல்துறை துரிதமாகச் செயல்பட்டு மிருகத்தனமாக நடந்து கொண்டிருக்கும் மக்கள் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தி, அந்தக் கல்லறைத் தோட்டத்திலேயே டாக்டரின் உடலைப் புதைத்திருக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஜாதி, மத, இனத்தைக் கடந்து இரும்புக்கரம் கொண்டு போலீஸார் செயல்பட வேண்டும். இந்தச் சமுதாயத்தைத் திருத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்” என்கிறார்.

சம்பவம் குறித்து வேலங்காடு சுடுகாட்டில் பணிபுரிபவர்களிடம் நேரில் சென்று பேசிய போது, ”அன்றைய தினம் இரவு 11.30 மணியளவில் அரசு அதிகாரிகள் ஜே.சி.பி வாகனத்துடன் மயானத்துக்கு வந்து பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். இதனால், என்னவோ ஏதோ என்று பயந்து போன இந்தப் பகுதி மக்கள் அவர்களைத் தாக்கிவிட்டனர். டாக்டர் உடலுடன், இங்கிருந்து சென்றவர்கள் மீண்டும் நள்ளிரவு 1.30 மணியளவில் மீண்டும் மயானத்துக்குத் திரும்பி உடலைப் புதைத்து விட்டுச் சென்றுள்ளனர். இவ்வளவுதான் எங்களுக்கு தெரியும். எங்களுக்கு எந்தத் தகவலும் அதிகாரிகள் சார்பாக தெரிவிக்கப்படவில்லை” என்று முடித்துக்கொண்டனர்.

வேலங்காடு மயானத்தில் நடந்த சம்பவம் குறித்து டாக்டர். பிரதீப்பிடம் பேசினோம். அதிர்ச்சியிலிருந்து மீளாத அவர் தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார், ”டாக்டர் சைமனும் நானும் 10 வருட நண்பர்கள். டாக்டர் இறந்த துக்கம் தாளாமல் நானும் சில டாக்டர்களும் அவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளச் சென்றோம். கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்ட பகுதியில் போராட்டம் நடந்துகொண்டிருந்ததால், போலீஸார் எங்களை வேலங்காடு மயானத்துக்கு அழைத்துச் சென்றனர். வேலங்காடு மயானத்துக்குள் சென்று 15 நிமிடங்கள்தான் இருக்கும். மக்கள் கும்பல் கும்பலாக உள்ளே புகுந்தனர். அங்கிருந்த போலீஸாரால் மக்களைச் சமாளிக்க முடியவில்லை. ஆம்புலன்ஸ் டிரைவர்கள், குழி தோண்டிக் கொண்டிருந்த பொக்லைன் இயந்திர டிரைவர் ஆகியோரைக் கடுமையாகத் தாக்கினார்கள். இதைப் பார்த்த என்னுடன் இருந்தவர்கள் மயானத்திலிருந்து தப்பி வெளியே வந்துவிட்டனர். பிறகு டாக்டர் உடலை அங்கிருந்து ஆம்புலன்ஸில் மீண்டும் மருத்துவமனைக்கே கொண்டு சென்றோம். வழியில் ஈகா தியேட்டர் அருகில், ஆம்புலன்ஸை நிறுத்தி விட்டு, டிரைவர்கள் இருவரும் மருத்துவமனைக்குச் சென்றனர். அப்போது, டாக்டரின் உடல் அநாதை போல ஆம்புலன்ஸில் கிடந்தது. என்னால், அந்தக் காட்சியச் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. என்னுடன் இரண்டு வார்டு பாய்கள் இருந்தனர். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நான் மற்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் மற்றும் வார்டுபாய்களுடன் மீண்டும் வேலங்காடு சுடுகாட்டுக்குச் சென்று டாக்டரின் உடலைக் குழிக்குள் புதைத்து விட்டு வந்தோம். நான் , இந்த அரசிடம் வைக்கும் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். மருத்துவர்களைப் பாதுகாப்பதற்கென்று தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும். அப்போதுதான் வருங்காலத்தில் டாக்டர்களின் நலன் பாதுகாக்கப்படும” என்றார் வேதனையுடன்.

டாக்டர். பிரதீப்

இந்த நிலையில் டாக்டர் சைமனின் மனைவி ஆனந்தி அளித்துள்ள பேட்டியில் ,”நாங்கள் நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தைச் சேர்ந்தவர்கள். என் கணவர், பூந்தமல்லியில் மருத்துவமனை நடத்தி வந்தார். தினமும் ஏராளமான நோயாளிகளைச் சந்திப்பவர். சமீபத்தில் அவர் எங்கேயும் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யவில்லை. அவரிடத்தில் பரிசோதனைக்கு வந்தவர்களிடமிருந்து அவருக்குக் கொரோனா பரவியிருக்கலாம் என்று நினைக்கிறேன். என் கணவர் சென்னைப் பெருவெள்ளத்தின் போது, பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டவர். அவருக்கு இப்படியொரு நிலை ஏற்படுமென்று கனவிலும் நினைக்கவில்லை. வேலங்காடு மயானத்தில் என் கணவரின் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்களை மக்கள் மனிதாபிமானமே இல்லாமல் தாக்கினார்கள். டிரைவர்களின் மண்டை உடைந்து ரத்தம் சொட்டச் சொட்ட நின்றதைப் பார்த்தபோது நாங்கள் நிர்கதியாக இருப்பதை உணர்ந்தோம்.

வேலங்காடு மயானத்திலிருந்து ஈகா தியேட்டர் வரை ஆம்புலன்ஸில் தப்பி வந்தோம். பிறகு என் கணவரின் நண்பர் பிரதீப்தான் போலீஸார் ஒருவரின் உடையை வாங்கி அணிந்துகொண்டு, மீண்டும் ஆம்புலன்ஸ் வாகனத்தை வேலங்காடு நோக்கி ஓட்டிச் சென்றார். பின்னர், சிலர் உதவியுடன் தன் உயிரையும் பணயம் வைத்து என் கணவரின் உடலைப் புதைத்து விட்டு வந்தார். வேலங்காடு ஒரு மயானம். அவரை புதைத்த போது, நானோ என் மகனோ அருகில் இல்லை. என் கணவரின் உடல் அநாதை போல புதைக்கப்பட்டது , எனக்குத் தாங்க முடியாத துயரத்தை தருகிறது. என் கணவரின் உடலை அங்கிருந்து எடுத்து வந்து எங்கள் வழக்கப்படி, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்தால்தான் அவரின் ஆன்மா சாந்தியடையும். தமிழக அரசு இதற்கு எங்களுக்கு உதவ வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக 42 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன், ”உலக சுகாதார அமைப்பு காட்டிய வழிகாட்டுதலின்படி, கொரோனா தொற்றால் இறந்தவர்கள் உடல் தகுந்த பாதுகாப்புடன் புதைக்கப்படுகிறது. டாக்டர். சைமனின் உடலைப் புதைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு மேலும், கொரோனாவால் இறந்தவர்களின் உடலைப் புதைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினால் தயவு தாட்சண்யம் காட்டப்படாது” என்று எச்சரித்துள்ளார்.

வேலங்காடு மயானம்

கொரோனாவால் இறப்பவர்கள் உடல் அடக்கம் செய்யும் போது, மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, சென்னை மாநகராட்சி சார்பில் இன்று வெளயான பத்திரிகைகளில் விளம்பரங்கள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. டாக்டர் சைமனின் மனைவியிடம் தொலைபேசியில் பேசிய முதல்வர் அவருக்கு ஆறுதல் கூறியதோடு தைரியமாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து மருத்துவர்களுக்கு நிகழும் இதுமாதிரியான சம்பவங்களால் கொதித்த மருத்துவர்கள் இன்று பணிகளை நிறுத்திப் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். ஆனால் அரசு தலையிட்டு சமாதானம் செய்ததை அடுத்து போராட்டத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர். இதையடுத்து கொரோனா மருத்துவப் பணிகளின்போது இறக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். தவிர, உயிரிழக்கும் மருத்துவர் அல்லது மருத்துவப் பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Must Read

கர்ப்பிணி யானை செத்தது எப்படி? இறுதி அறிக்கை வெளியீடு!

கேரளா பாலக்காடு மாவட்டத்தில் அண்ணாச்சிப் பழத்தில் வெடிமருந்து வைத்து கொலை செய்யப்பட்ட யானை எதனால் உயிரிழந்தது என சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கேரள அரசு அறிக்கை...

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 39 பேருக்கு கொரோனா!!

சென்னையில் உடல்நலம் குறைவால் அண்மையில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்த நபரின்...

‘இவங்கெல்லாம் இனிமே நாடாளுமன்றத்துக்குள்ள நுழையக் கூடாது’

நாடாளுமன்ற இரு அவைகளின் செயலக அலுவலக பணியாளர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்றும் நாடாளுமன்ற அலுவலக பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு சில அதிரடி...

தங்க பிளேட்டினால் ஆன சவப் பெட்டி: கறுப்பர்கள் ஒன்றினைந்து செய்த காரியம் இது

போலியான $20 டாலர் நோட்டு ஒன்றை உணவகத்தில் கொடுத்ததற்காக, அவரை பிடித்த பொலிசார் கழுத்தை நசுக்கியே கொன்றார்கள். கறுப்பு இனத்தவர்கள் என்றால் அமெரிக்கர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்கள். இதனால் இறந்து போன ஜோர்ஜுக்கு...

லொஸ்லியாவின் முதல் படம் பிரென்ட்ஷிப் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக தமிழ் நாட்டு மக்களுக்கு பரிச்சயமானவர் . இலங்கையை சேர்ந்த அவர் அங்கு ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின் பிக்...