முகப்பு சினிமா "ரேபிட் டெஸ்ட் கிட்ஸ்... இந்திய அரசு, தமிழக அரசின் அலட்சியங்கள்!"- செயற்பாட்டாளர் தரும் விளக்கங்கள்

“ரேபிட் டெஸ்ட் கிட்ஸ்… இந்திய அரசு, தமிழக அரசின் அலட்சியங்கள்!”- செயற்பாட்டாளர் தரும் விளக்கங்கள்

ரேபிட் டெஸ்ட் கிட் உபயோகத்தைத் தற்காலிகமாக நிறுத்தச் சொல்லி சமீபத்தில் அறிவித்திருந்தது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமான ஐசிஎம்ஆர் (ICMR). இதற்குக் காரணமாக, ரேபிட் டெஸ்ட் கருவிகள் தரமின்றி இருக்கின்றன என்ற குற்றச்சாட்டு சொல்லப்பட்டு வரும் நிலையில், அது குறித்து அறிய முயன்றோம்.

மருத்துவரும் செயற்பாட்டாளருமான புகழேந்தியிடம் இதுகுறித்துப் பேசினோம்.

மருத்துவர் புகழேந்தி

“தமிழக அரசு கொரோனா பரிசோதனைக் கருவிகள் வாங்கியதில் அலட்சியமாக நடந்துள்ளது என்பது, இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவர்களின் அலட்சியம், கிட் வாங்கும் நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து தொடங்குகிறது. ஆம், இவர்கள் கிட் ஆர்டர் செய்த நிறுவனம், இங்கிலாந்து அரசின் குற்றச்சாட்டுப் பட்டியலில் இருக்கும் நிறுவனம். Guangzhou Wondfo Biotech Ltd என்ற அந்த நிறுவனத்திலிருந்து தமிழக அரசு 5 லட்சம் கிட்கள் வாங்கியதைப்போல, இங்கிலாந்து 20 லட்சம் கிட்கள் வாங்கியது. அவை அனைத்தும் தரமற்று இருப்பதாகச் சொல்லி திருப்பி அனுப்பப்பட்டு இழப்பீடு கோரப்பட்டுள்ளது. அவர்கள் அப்படி இழப்பீடு கோரிய மறுதினம்தான், தமிழக அரசு ஆர்டர் கொடுத்திருக்கிறது.

இந்தத் தகவலை துல்லியமாகச் சொல்ல வேண்டுமென்றால், மார்ச் 6-ம் தேதி டெய்லி மெயில் (Daily Mail) எனும் ஆங்கில நாளிதழில் இங்கிலாந்து பிரதம மந்திரியின் செய்தித் தொடர்பாளர் ஜேம்ஸ் ஸ்லாக், குறிப்பிட்ட நிறுவனத்தின் பரிசோதனைக் கருவிகள் தரமற்று இருப்பதை உறுதிப்படுத்தியிருந்தார். இழப்பீடு குறித்தும் பேசியிருந்தார். மார்ச் 7, தமிழக அரசு 24,000 கருவிகளை அதே நிறுவனத்திடம் ஆர்டர் செய்தது. மேலும் 12,000 கருவிகளை தமிழக அரசு ICMR-ரிடமிருந்து வாங்கியுள்ளது.

கோவிட் -19 கொரோனா

Also Read: ரேபிட் கிட் விலை, ஸ்டாலின் அரசியல், மத்திய அரசு நிதி… என்ன சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்?

தமிழக அரசு ஆர்டர் கொடுத்த அடுத்த சில தினங்களில் இந்திய அரசும் அதே நிறுவனத்திடம் பல்க் ஆர்டர் செய்தது. அதிலும் வேடிக்கை என்னவென்றால், ஏப்ரல் 2-ம் தேதிதான் இந்நிறுவனத்திடமிருந்து வாங்கிய ரேபிட் கிட் பரிசோதனைக் கருவிகள் (இதற்கு முன் வாங்கியிருந்த கிட்ஸ்), சரியாக வேலைசெய்கின்றன என ICMR ஒப்புதல் அளித்திருந்தது.

தமிழ்நாட்டிலிருந்து ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் ஆர்டர் கொடுத்திருந்த தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் தலைவர் உமாநாத், ஐஎம்சிஆரின் தகவலின் பேரில், அனுமதி பெற்று கருவிகளை வாங்கியதாகக் கூறிவருகிறார். ஐசிஎம்ஆரே சொல்லிவிட்டது எனச் சொல்லும் இவர்கள், அந்தத் தேதி குறித்து யோசிக்க மாட்டார்கள். ஐசிஎம்ஆர் சொல்லி, நான்கு நாள்கள் கழித்து இங்கிலாந்து அரசு குற்றச்சாட்டு வைத்துள்ளது எனும்போது அதை அலட்சியமாக அணுகுவது எப்படி சரியான செய்கையாகும்?

கோவிட் -19 கொரோனா

இங்கிலாந்தைப் போலவே, அமெரிக்காவும் அந்நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டை வைத்ததை, இங்கு நினைவூட்ட விரும்புகிறேன். கொரோனா போன்றொரு பேண்டெமிக் சூழல் நிலவும்போது, பரிசோதனைக் கருவிகள் விஷயத்தில் அதிகாரிகள் அஜாக்கிரதையாகச் செயல்படுவது எப்படி சரியாகும்? சரி, இப்போதாவது தங்களின் தவறுகளை இவர்கள் ஒப்புக்கொள்கிறார்களா என்றால், அதுவும் இல்லை. ஒருவர் இன்னொருவர் மீது பழிபோட்டுத் தப்பிக்கத்தான் பார்க்கின்றனர்” என்கிறார் ஆதங்கமாக.

இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியில், தரமான ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் நம்மை வந்தடைந்திருந்தால் மட்டும், நம்மால் நோயாளிகளை முழுமையாகக் கண்டறிந்துவிட முடியுமா, அதற்கு எந்தளவுக்கு சாத்தியம் உள்ளது போன்ற கேள்விகளும் எழாமல் இல்லை. காரணம்…

தமிழக மத்திய பல்கலைக்கழக நுண்ணுயிர் துறைத்தலைவர் ராம் ராஜசேகரன், ரேபிட் கிட்ஸ் மூலம் பரிசோதனைக் கருவிகள் 65% மட்டுமே சரியான முடிவை காட்டும் எனக் கூறியுள்ளார்.

கோவிட் -19 கொரோனா வைரஸ்

ஆனால், தமிழகம் சமூகப் பரவலுக்கு (மூன்றாவது நிலை கொரோனா தாக்குதல்) சென்றுவிட்டதா இல்லையா என்பதை ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் உதவியோடு முடிவு செய்வோம் என அறிவித்திருந்தார்கள் சுகாதாரத்துறை செயலாளர்கள். துல்லியத்தன்மை இல்லாத பரிசோதனைக் கருவிகளை வைத்துக்கொண்டு, தமிழகம் சமூகப் பரவலுக்குச் சென்றுள்ளதா இல்லையா என்பதை எப்படி அறிய முடியும்?

மருத்துவர் புகழேந்தியிடமே கேட்டோம்.

“இப்போதுவரை, சமூகப் பரவலுக்கு நாம் செல்லவில்லை என்கிறார்கள் சுகாதாரத்துறையினர். வைராலஜி பேராசிரியரான ஜேக்கப் ஜான், ஆங்கிலத்தில் `Options of Evidence Does not means Evidence of Option’ என்றொரு வாக்கியம் சொல்லுவார். தவறான ஆதாரங்களை முன்னிறுத்துவதால், பொய்யை உண்மையாக்கி விட முடியாது என்பதுதான் வாக்கியத்தின் சாராம்சம். தமிழக சுகாதாரத்துறைக்கு ஏற்ற வாசகம் இது. ஏனெனில், அவர்கள்தான் ரேபிட் கிட்ஸ் மூலம் சமூகப்பரவல் நிலைக்குள் நாம் போய்விட்டோமா இல்லையா என்பதை நிர்ணயிக்கப்போவதாகச் சொன்னார்கள்.

கொரோனா

ஏற்கெனவே அந்தச் சோதனையில் துல்லியத்தன்மை குறைவுதான் எனும்போது, அலட்சியத்தோடு கருவி இறக்குமதியில் இறங்கி கூடுதல் சிக்கலையும் இவர்கள் பெற்றிருக்கிறார்கள்.

மொத்தமாக, நம்பகத்தன்மை முழுவதுமாகக் கேள்விக்குறியாகிறது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல அரசு உயர் அதிகாரிகளுக்கும் ரேபிட் கிட்ஸ் மூலம் பரிசோதனை செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாகச் செய்திகள் உள்ளன. இவர்களுக்கெல்லாம் நெகட்டிவ் என வந்துவிட்டதாம். துல்லியத்தன்மை இல்லாத கருவி, தரமற்ற கருவியிலெல்லாம் பரிசோதனை செய்துவிட்டு, அதன் முடிவை சொன்னால் அதை எப்படி ஏற்க முடியும்? யாருக்கும் கொரோனா வரும் என நான் சொல்ல வரவில்லை. ஆனால், வந்து அதை நீங்கள் கண்டறியாமல் விட்டுவிட்டால், சிக்கல் யாருக்கு? அலட்சியத்துக்காக உயிரைப் பணயம் வைப்பது தவறில்லையா?

Also Read: எதிர்பார்த்தது 90%… கிடைத்ததோ 5.4%..! – ரேபிட் டெஸ்ட் கிட்களால் கலங்கும் மாநிலங்கள்; ICMR ஷாக்

கோவிட் -19 கொரோனா

தமிழக அரசைப் பொறுத்தவரையில், அதிக பரிசோதனை என்பது மட்டுமே நோக்கமாக இருக்கிறது. அதுதான் அனைத்துப் பிரச்னைக்கும் அடிப்படை. அந்த ஒற்றைக் காரணத்தினால்தான், இவ்வளவு தவறுகள், அலட்சியங்களெல்லாம்.

அதையே நான் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். டெஸ்ட் விஷயத்தில், நேர்த்தியாகச் செயல்பட வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. அதை அவர்கள் இனியாவது செய்ய வேண்டும்” என்றார்.

தரம் சார்ந்த இந்தக் குற்றச்சாட்டுகள் யாவும், ஒருசில மாநில அரசுகளால் மட்டுமே உறுதிசெய்யப்பட்டுள்ளன. 34,000 ரேபிட் டெஸ்ட் கருவிகளை வாங்கிய தமிழக அரசு, இப்போதுவரை இதுபற்றி வாய் திறக்கவில்லை.

எனில், தமிழக சுகாதாரத்துறை தரக்குறைவு பிரச்னைகள் இருக்கிறதென்ற குற்றச்சாட்டுகளை ஏற்காமல் இருக்கிறதா என்றும், இங்கு இறக்குமதி செய்யப்பட்ட கருவிகள் தரமாக இருக்கின்றனவா என்றும் கேள்வி எழுகிறது. இதுகுறித்து அறிந்துகொள்ள, சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் ஜெயந்தியைத் தொடர்புகொண்டோம்.

“இப்போதைக்கு ஐசிஎம்ஆர் தரம் சார்ந்த பரிசோதனைகளைச் செய்துவருவதால், நாங்கள் எதுவும் கருத்து சொல்ல முடியாது” எனக் கூறிவிட்டார்.

ஐ.சி.எம்.ஆர்

ஒருவேளை, ஐசிஎம்ஆர் ரேபிட் கிட்ஸ் தரமற்று இருப்பதாகச் சொல்லிவிட்டால், வரும் நாள்களில் எப்படியான புதிய பரிசோதனை முறைகள் வழக்கத்துக்கு வரும் என இதுவரை தெரியவில்லை. இப்போதைக்கு வழக்கத்திலிருக்கும் பரிசோதனைகளையே பின்வரும் நாள்களிலும் பின்பற்றக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதுவரை செய்யப்பட்டு வந்தப் பரிசோதனைகளின் வேகம் போதவில்லை என்பதாலேயே ரேபிட் கிட்ஸை இந்தியா நாடப்போவதாகக் கூறப்பட்டு வந்த சூழலில், இப்போது அதுவும் கைவிடப்படும் அபாயம் நிலவிவருகிறது.

உலக நாடுகளோடு ஒப்பிடுகையில், டெஸ்ட் விஷயத்தில் இந்தியா ஏற்கெனவே பின்னோக்கி இருக்கிறது என்பதால், அரசு இந்த நேரத்தில் விரைந்து செயல்படுவது அவசியம்.

Must Read

நாளை ராமர் கோவில் பூமி பூஜை – பிரதமர் மோடி பயணத்தின் முழு விவரம்!

முதலில் ஹனுமன் கார்ஹியில் மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி பின்னர் அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்கிறார்.

கணவன் கண் முன்னே கூட்டு பாலியல், ஆதரவு அளித்த போலீஸ்!

பாலியல் குற்றவாளிகளுக்கு போலீஸ் ஆதரவு அளித்து புகாரைப் பெற மறுத்து வந்த நிலையில், மலைவாழ் மக்கள் கூட்டாக முன்னெடுத்த போராட்டம் குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது...

“உடம்பெல்லாம் வலிக்குதுப்பான்னு அவன் அழறப்போ பயமா இருக்கும்”-  கண்ணீரில் மிதக்கும் சென்னை குடும்பம்!

மருந்தில்லா நோயும் வறுமையும் ஒரு வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தால்..? பூந்தமல்லியை அடுத்த செந்நீர் குப்பத்தைச் சேர்ந்த ரவீந்திரன் குடும்பம்போலதான் இருக்கும். எதிர் எதிரே இரண்டு பைக்குகள் வந்துவிட்டால், ஒரு வண்டி நின்றுதான் போக...

ஆபாசம், அச்சுறுத்தல், கொலை மிரட்டல்… பெண் ஊடகவியலாளர்களை குறிவைக்கும் கும்பல்!

தமிழ்நாட்டில் ஊடகத்தினர் மீதான தாக்குதலில் `சீஸன் டூ' ஆரம்பித்திருக்கிறது. ஊடகத் துறையில் இயங்கிவரும் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து சமீபகாலமாக அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சமூக ஊடகங்களில் இதுதொடர்பான குற்றச்சாட்டுகள், விவாதங்கள் என இரு...

TikTok-ஐ வாங்க மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தை… வாங்கினால் இந்தியாவில் என்ன செய்யலாம்? #VikatanPoll

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவைப் போலவே டிக்டாக் app-ஐ தடைசெய்யவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதே சமயம், அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட், டிக்டாக் app-ஐ சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கப்...