முகப்பு சினிமா விகடனுக்காக விஜய்யும் விக்ரமும் சந்தித்தார்கள்... என்ன நடந்தது தெரியுமா?! #VikatanOriginals

விகடனுக்காக விஜய்யும் விக்ரமும் சந்தித்தார்கள்… என்ன நடந்தது தெரியுமா?! #VikatanOriginals

2006-ம் ஆண்டில், விஜயையும், விக்ரமையும் விகடனுக்காக ஸ்பெஷலாக சந்திக்க வைத்திருந்தோம்.

02/04/2006 மற்றும் 09/04/2006 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழ்களில் இந்த சந்திப்பை முழுமையாகப் பதிவு செய்திருந்தோம். அவற்றிலிலிருந்து சில பகுதிகள்… 

சென்னை- க்ரீன்பார்க் ஓட்டல்…

வழுக்கியபடி வந்து நிற்கிறது போர்டிகோவில் `போர்ஷே’… கறுப்பு நிற கார். “ஹை… நான்தான் ஃபர்ஸ்ட்!’’- ஜாலியாக வந்து இறங்குகிறார் விக்ரம். அடுத்த சில விநாடிகளிலேயே சீறி நுழைகிறது பி.எம்.டபிள்யூ. அதுவும் பிளாக். “இன்னும் அட்டெண்டண்ஸ் எடுக்கலியே, விஜய் பிரசென்ட் சார்!’’ எனக் கலக்கலாக விஜய்!

`ஹாய், ஹலோ’க்கள் பரிமாறியபடி இருவரும் ஓட்டலுக்குள் நுழைய, அதிர்கிறது க்ரீன்பார்க்!

செல்போன் கேமராக்கள் பளிச்சிட, ஆட்டோ கிராஃப்கள் துரத்த, தப்பித்து லிஃப்ட்டுக்குள் நுழைகிறார்கள். கண்ணாடிச் சதுரமாக இருக்கிற லிஃப்ட்டினில் விஜய் தலை கோத, விக்ரம் லுக் விட, இருவருமே சிரிக்கிறார்கள்.

விஜய் – விக்ரம்

விஜய் – விக்ரம்… தமிழ்த் திரையின் இளைய தலைமுறை துருவ நட்சத்திரங்கள். ஒருவர், பன்ச் டயலாக்குக்கும், கலகல காமெடிக்கும், குத்துப் பாட்டுக்கும், பிரபலமான அதிரடி ஆக்ஷன் ஹீரோ. இன்னொருவர், தன் பர்ஸில் கிரெடிட் கார்டுகளுக்கு நடுவே தேசிய விருதுகளுக்கும் இடம் வைத்திருக்கிற நம்பிக்கை நாயகன். இந்த சூப்பர் ஹீரோக்களுக்குள் ஒரு ஒற்றுமை, இருவருமே சென்னை- லயோலா கல்லூரித் தயாரிப்பு!

“கிளாஸ்ல இருந்த நேரத்தைவிட, பார்க்கிங் ஏரியாவில்தான் எல்லோரும் டாப் அடிப்போம். எதுக்குன்னே தெரியாம எப்பவும் சிரிச்சுட்டே இருப்போம். படிப்பைத் தவிர, சைட் அடிக்கிறதுதான் பொழுதுபோக்கு! மேடை நாடகங்கள் நடிக்க ஆரம்பிச்சேன். ரெகுலரா ஜிம் போக ஆரம்பிச்சேன். அப்பவே எனக்கு சினிமா கனவு. உங்களுக்கு எப்படி விஜய்?’’ என்கிறார் விக்ரம்.

“நான் பிறந்ததே சினிமா குடும்பம்தானே. அப்பா அப்போ பரபரப்பான கமர்ஷியல் டைரக்டர். குழந்தை நட்சத்திரமா நிறைய படங்களில் நடிக்க வெச்சார். குட்டி விஜயகாந்த்னா அப்போ என்னைத்தான் கூப்பிடுவாங்க. எனக்கும் சினிமாதான் எதிர்காலம்னு முடிவு பண்ணிட்டேன். லயோலாவுல சேர்ந்ததும் இன்னும் ஆர்வம் பத்திக்குச்சு!’’

“எனக்கு விஸ் காம் டிபார்ட்மென்ட்னா கொஞ்சம் பொறாமை விஜய். ஏன்னா… லயோலாவில் அது மட்டும்தானே கோ. எட். ஆளுக்கொரு கேர்ள் ஃபிரெண்டோட உலக சினிமாக்கள் பேசிட்டு ஜாலியா பைக்ல அலைவீங்கள்ல.’’

விஜய் – விக்ரம்

“அய்யய்யோ, நமக்கெல்லாம் அந்தக் கொடுப்பினை இல்லீங்ணா! சொல்லப்போனா காலேஜ்ல நான் இருக்கிற இடமே தெரியாது. அமைதியான பையன்னு சொல்ல வரலை. அதென்னவோ ஒரு காம்ப்ளெக்ஸ். ஆனா, அங்கே நான் சம்பாதிச்ச விஷயம், நண்பர்கள். லயோலாவில் என்னோட படிச்ச பசங்கதான் இப்பவும் என் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ்’’ என்கிறார் விஜய்.

“நல்ல விஷயம்ல! இன்னிக்கு டைரக்டர் `தரணி’யா இருக்கிற ரமணியெல்லாம் என் செட். பத்துப் பதினஞ்சு வருஷம் கழிச்சுப் பார்த்தா, அவன் டைரக்டர். நான் ஹீரோ. நேரம் கிடைச்சா கார்ல கிளம்பிப் போய் காலேஜுக்குள்ள ஒரு ஜாலி ரவுண்டு அடிச்சுட்டுப் போவோம்.’’

“ஃபீலிங்ஸு?’’ என விஜய் சிரிக்க, “ய்யா… ய்யா!’’ எனப் புன்னகைக்கிறார் விக்ரம்.

“ஆமா, புதுப்படத்துக்கு ரெடியாகியாச்சா?” என விக்ரம் விசாரிக்க, “மூணு மாசம் நல்ல ரெஸ்ட்ல இருக்கேங்க. நிறைய கதைகள் கேட்டுட்டே இருக்கேன். இன்னும் எதிர்லும் தெளிவா மனசு ஃபிக்ஸ் ஆகலை. ஒரு விஷயம் கொஞ்சம் ஃபைனல் ஷேப்புக்கு வந்துட்டிருக்கு. இதோ… ஒருவாரம், பத்து நாள்ல ரெடியாகிடுவேன். யப்பா, உடம்பை கும்முன்னு ஏத்தியிருக்கீங்களே,

`பீமா’வுக்குப் புது கெட்-அப்பா விக்ரம்?”

“ஆமா! ஷூட்டிங் கிளம்ப வேண்டிய நேரம் வந்தாச்சு. ஊரெல்லாம் மழை பெய்ஞ்சு ஜில்லுனு இருந்தப்போ ரெஸ்ட்ல இருந்துட்டு, சம்மர் ஆரம்பிக்கிற டைம் பார்த்து வேலை ஆரம்பிக்குது. நம்ம ராசி அப்படி!” என்று சிரிக்கிற விக்ரம், “நாமெல்லாம் ஒரு படம் முடிச்சிட்டுத்தானே அடுத்த படம் போறோம். சல்மான்கானை சமீபத்தில் பார்த்தேன். `என்ன பண்றீங்க?’னு கேட்டார், “ `மஜா’ முடிச்சிட்டு அடுத்த படம் பண்ணப்போறேன்’னு சொன்னேன். `மை காட், ஒரு படம்தான் நடிக்கிறீங்களா? நான் இப்போ 21 படம் நடிச்சிட்டிருக்கேன்’னு கேஷூவலா சொன்னார் சல்மான். நான் ஷாக்காகிட்டேன்” என்றதும், அட்டகாசமாகச் சிரிக்கிறார் விஜய்.

“தமிழ் சினிமாவில் இது நல்ல கல்ச்சர். ஒரு படம் ஆரம்பிச்சா, அதை மொத்தமா முடிச்சுக் கொடுக்கிறதால், கடைசி ஃபிரேம் வரைக்கும் அதில் தெளிவா கான்சன்ட்ரேட் பண்ண முடியுது. அதுவும் விக்ரம் மாதிரி ஆட்களுக்கு இன்னும் வசதி. உடம்பை ஏத்துவாங்க, இறக்குவாங்க. கெட்-அப்பையே மாத்திப்பாங்க. படத்துக்குப் படம் பளிச்சுனு அந்த வித்தியாசம் தெரியும். நம்ம கதையே வேற, சட்டையை மட்டும் மாத்திட்டு அடுத்த படத்துக்கு நடிக்கப் போயிடுவேன்’’ – தன்னைப்பற்றி தானே ஜோக் அடித்துக்கொண்டு சிரிக்கிறார் விஜய்.

“நான் உங்க ரசிகன் தெரியுமா விஜய்!’’ என்று விக்ரம் ஆரம்பிக்க, “ண்ணா… நான் எதுனா தப்புப் பண்ணியிருந்தா, நாம பேசித் தீர்த்துக்கலாங்ணா’’ என்கிறார் விஜய் கொஞ்சலாக.

“யெஸ் விஜய், நானெல்லாம் ஒவ்வொரு படத்துக்கும் எடையை ஏத்துறது, குறைக்கிறதுன்னு படம் சிறப்பா வரணும்னு என்னென்னவோ கஷ்டப்படுவேன். ஆனா, நீங்க ஜாலியா புது மாப்பிள்ளை மாதிரி வந்து நின்னு `அப்படிப் போடு… போடு’ன்னு ஒரே டான்ஸ்ல அசத்திருவீங்க. அப்புறம் உங்க ஸ்பெஷல் காமெடி. ரொம்பப் பிரமாதமா பண்றீங்க’’ -விக்ரம் சொல்லச் சொல்ல மலர்கிற விஜய்,

விஜய் – விக்ரம்

“ஸ்டேட் அவார்டு, நேஷனல் அவார்டுனு அடிச்சுத் தூள் பண்ணிட்டு இருக்கிறது இப்போ நீங்கதான். எனக்குப் பிடிச்ச உங்க படங்களை லிஸ்ட் பண்ணணும்னா கிட்டத்தட்ட எல்லாப் படங்களையும் சொல்லணும். `ஜெமினி’யில் `ஓ போடு’ன்னு ஆடிட்டு, சடார்னு `காசி’ மாதிரி ரொம்ப வித்தியாசமான கேரக்டரை ஜஸ்ட் லைக் தட் பின்னிப் பிரிச்சுடுவீங்க. `பிதாமகன்’லாம் சான்ஸே இல்லை… படம் பார்க்கும்போதே, என்னை மறந்துட்டேன்… `நிச்சயம் விக்ரம் நேஷனல் அவார்டு வாங்குவார்’னு அப்பவே பேட்டியில் சொன்னேன்.

`அந்நியன்’ மாதிரி ஒரே படத்தில் மூணு வித்தியாசமான கேரக்டர்கள் பண்றதெல்லாம், ரொம்பப் பெரிய ரேஞ்சுங்ணா! ஒரே படத்தில் மூணு கெட்-அப், மூணு கேரக்டர், மூணு பாடி லாங்வேஜ். அதுவும் மாறி மாறிப் பேசுவீங்களே அந்த ஸீன்… ஹாட்ஸ் ஆஃப்!’’ என விஜய் சொல்ல, “தேங்க்ஸ் எ லாட்!’’ எனப் பேச ஆரம்பிக்கிறார் விக்ரம்.

“இதுதான் உங்ககிட்டே எனக்குப் பிடிச்ச விஷயம் விஜய். ஈகோவே இல்லாம பேசறதிலும், பழகுறதிலும் நீங்க கில்லிதான். எனக்குத் தெரிஞ்சு விஜய்க்குத்தான் ரசிகர்கள் அதிகம்னு நினைக்கிறேன். `காதலுக்கு மரியாதை’ வந்ததுமே விஜய் மேல ஒரு ஸ்பெஷல் அட்ராக்ஷன் வந்தாச்சு. எனக்கு உங்க டயலாக் டெலிவரி பிடிக்கும். ஆமா, இப்பல்லாம் ஒவ்வொரு படத்துக்கும் உங்க அழகு ச்சும்மா கூடிட்டே போவுதே, அந்த ரகசியம் என்னன்னு சொல்லுங்களேன்?’’

“ண்ணா, ண்ணா!’’ என வெட்கம் காட்டுகிறார் விஜய்.

“எனக்கு `சச்சின்’ பிடிச்சது. `கில்லி’ மாதிரி பவர்ஃபுல் ஆக்‌ஷன் படம் பண்ணிட்டு, சாக்லெட் பாய் மாதிரி பர்ஃபார்ம் பண்ணியிருந்தது பார்க்க க்யூட்டா இருந்தது. கேஷூவலா சின்னச் சின்ன குறும்புகள் பண்ணி அசத்தறீங்க விஜய். ப்ளீஸ், அந்தத் தொழில் ரகசியம் சொல்லுங்களேன்?” என்று மனதாரப் புகழ்கிறார் விக்ரம்.

என்ன சொல்வதெனத் தெரியாமல் சிரிக்கிற விஜய்,

“நீங்க சினிமாவுக்கு வந்தது எதுக்காக?” என்கிறார் விக்ரமிடம்.

“நிஜம் சொல்லணும்னா, கார் வாங்கணும், ஹேப்பியா இருக்கணும். எல்லோரும் திரும்பிப் பார்க்கணும்னு சின்னச் சின்ன ஆசைகளுக்காகத்தான் சினிமாவுக்கு வந்தேன். வந்து ஒரு ரவுண்டு முட்டி மோதிப் போராடி, ஒரு இடம் கிடைச்சதுக்கு அப்புறம் நம்ம நடிப்புக்கு… உழைப்புக்கு ஒரு மரியாதை கிடைக்குது பாருங்க, அது, அந்தக் கார், பணம் எல்லாதையும் விடப் பெருசுன்னு இப்போ புரியுது.”

“நான் இன்னும் சுத்தம். எனக்குப் படிப்பே வரலை. வாழ்க்கையில் படிப்பு தேவைப்படாத ஏரியாவில் ஒண்ணு சினிமா. அப்பிடி, அப்பிடி உள்ளே வந்த பையன் நான்!” – ஸ்டைலாகச் சிரிக்கிறார் விஜய்.

“காலேஜ் நாட்களில் நான் நிறைய நடிச்சேன் விஜய். லயோலா மாதிரி இடத்தில் படிக்கும்போது, நம்மை வளர்த்துக்க நிறைய ஸ்கோப் கிடைக்கும். ஆனா, அவ்வளவு கனவுகளோட வந்தாலும் ஆரம்பத்தில் பெரிய `பிரேக்’ எதுவும் கிடைக்கலை. ரொம்ப நாள் கழிச்சு பாலாவைச் சந்திச்சேன். அப்ப ஏற ஆரம்பிச்சது என் கிராஃப். என் திறமைக்கு நல்ல தீனி கிடைக்க ஆரம்பிச்சது. கெட்-அப் சேஞ்ச் பண்றதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. நீங்க நிச்சயமா பாலா டைரக்‌ஷன்ல ஒரு படம் பண்ணனும் விஜய். இது பர்சனலா என் ஆசை. ஏன்னா, அந்த கெமிஸ்ட்ரி, அந்த மேஜிக் தனியா இருக்கும். அதுக்கு முன்னால், நான் உங்ககிட்ட கொஞ்சம் `டான்ஸ்’ டிப்ஸ் கேட்டு வாங்கிக்கிறேன். ஓ.கே.வா?” என்கிற விக்ரமை புன்னகையால் எதிர்கொள்கிறார் விஜய்.

“நான் இப்பவும் தெருவில் ஜாலி கிரிக்கெட் ஆடுற பார்ட்டிதான் விஜய். ஆனா, சீரியஸ் மேட்ச் ஆடுற அளவுக்கு டச் இல்லை. ஒரு முக்கியமான விஷயம் தெரியுமா, நான் சும்மா டி.வி-யில் கிரிக்கெட் பார்க்க உட்கார்ந்தாலே, அன்னிக்கு நம்ம டீம் நிச்சயம் தோத்துடும். அப்படி ஒரு ராசி எனக்கு!’’ எனச் சிரிக்கிறார் விக்ரம்!

“கேம்ஸ் இருக்கட்டும், இப்போ ட்ரீம்ஸ் பத்தி பேசலாம். இப்ப நாம நிறைய ஹீரோயின்களோட டூயட் பாடுறோம். உங்க ட்ரீம் ஹீரோயின் யார் விஜய்?’’ என்று விக்ரம் கொக்கி போட, “ஆஹா, இந்த விளையாட்டுக்கு நான் வரலை சாமீ!’’ எனக் குறும்பாகச் சிரிக்கிறார் விஜய்.

“எனக்கு அப்பட்டமான கிளாமர் அவ்வளவா பிடிக்காது. ஹோம்லியான… ஒரு ரம்யமான வசீகரம் இருக்கும்ல. அதுதான் என் சாய்ஸ். அப்பவும் இப்பவும் எப்பவும் என் சாய்ஸ் ஜெயப்ரதா. `சலங்கை ஒலி’ படம் இப்பவும் பார்த்துட்டே இருக்கலாம். `மௌனமான நேரம், மனதில் என்ன பாரம்?’னு பார்வையிலேயே கிறங்கடிப்பாங்கள்ல!’’ என்று விக்ரம் எடுத்துக்கொடுக்க, “எனக்கு ஸ்ரீதேவிங்ணா!’’ என ஆரம்பிக்கிறார் விஜய்.

“திகைச்சுப் பார்க்கவைக்கிற அழகு. ஆனா பச்சப்புள்ள மாதிரி பேச்சு, சிரிப்புன்னு ஸ்கோர் பண்ணிடுவாங்க. தமிழ், தெலுங்குன்னு இல்லாம, மொத்த இந்தியாவும் கொண்டாடின பெண்ணாச்சே!” என்கிறார் விஜய்.

“ஷூட்டிங் டைம் தவிர, விக்ரம் சாரை மீட் பண்ணணும்னா எங்கே பிடிக்கலாம்’’ என விஜய் ஜாலியாக விசாரிக்க, “அந்த விதத்தில் நான் ஜாலி விஜய். பெசன்ட் நகர்ல என் வீடு. இப்பவும் அங்கே குட்டிப் பசங்களோட தெருவில் கிரிக்கெட் ஆடுவேன். பீச்ல வாக்கிங் போவேன். முதல் தடவையா பார்க்கிறவங்க, டக்குனு ஹார்ட் அட்டாக்கே வந்த மாதிரி திகைச்சுப் பார்ப்பாங்க. ரெண்டு வாரம் கழிச்சு `அதோ வர்றார் பார் விக்ரம். ரெகுலரா வருவார்’னு பழகிடும். இதுதான் என் ஃபார்முலா!’’.

“சென்னையில் பொதுவா வெளியே நிறைய சுத்த முடியலை விக்ரம். ரிலாக்ஸ்டா இருந்தேன்னா, சத்தமா மியூஸிக் வெச்சுட்டு, கூடவே நானும் சேர்ந்து பாடிட்டே தனியா டிரைவ் போவேன். அப்பப்போ ஈ.சி.ஆர் ரோட்டில் ஜாலி டிரைவ்.” – இது விஜய்.

“நான் கட்டுப்பாடா இருக்கிறது என் குழந்தைகளோட இருக்கும்போது மட்டும்தான் விஜய். ஒரு அப்பாவா அவங்களோட நான் நிக்கிற நேரத்தில், என்னை ஒரு ஸ்டாரா யாரும் பார்க்கிறதை விரும்ப மாட்டேன். முதல்ல, அவங்க பிரைவஸி கெட்டுடும். என் பொண்ணு அக்ஷிதா ரொம்ப ஷார்ப். `விக்ரமின் மகள்’ங்கிற அடை யாளத்தைவிட, `அக்ஷிதாவின் அப்பான்னு தான் என்னை யாரும் பார்க்க விரும்புவாங்க. ஆனா, என் பையன் த்ரூவ் இருக்காரே… அப்படியே உல்டா! எங்கேயோ தியேட்டர்ல போய் டிக்கெட் கிடைக்கலைன்னதும், `விக்ரமோட சன் வந்திருக்கேன்னு போய்ச் சொல்லுங்க, போங்க!’ன்னு பந்தாவா சொல்லியிருக்கார்!’’

“பசங்ககிட்ட அது ஒரு ஏக்கம் இருக்குல்ல. என் பையன் சஞ்சய்யும் அப்படியேதான்… `அப்பா இன்னிக்கு ஈவினிங் என்னை ஸ்கூலுக்கு வந்து பிக்-அப் பண்ணிக்கோ’ன்னு கேட்பான். காரெடுத்துட்டுப் போய்க் கூப்பிட்டா, எல்லோரும் பார்க்கிற மாதிரி என்னோட ஒரு நடை நடந்து வருவான் பாருங்க, சாருக்கு அதில் அப்படி ஒரு பெருமை!

சரி, சாப்பாடெல்லாம் எப்படி விக்ரம்?’’

“டைனிங் டேபிள்ள கபீம்குபீம்தான். சாதாரணமா பதினஞ்சு இட்லிகூட சாப்பிடுவேன். ஒரு படத்துக்கு கும்முனு ரெடியாகணும்னா, வேளாவேளைக்கு தெளிவா சாப்பிட்டு, மணிக் கணக்குல ஜிம்ல வொர்க் அவுட் பண்ணி தயாராவேன். வெயிட் குறைக்கணும்னா, வெறுமனே ஜூஸ் மட்டுமே குடிச்சு வாரக்கணக்கில் உயிர் வாழவும் தயாரா இருப்பேன்.’’

“எப்பவுமே உடம்பை ஸ்லிம்மா வெச்சிருக்கீங்களே, அதென்ன ரகசியம் விஜய்?’’

“எனக்கு இப்பவும் ஒரு விநோத பழக்கம் உண்டுங்க. தினம் சாயங்காலம் ஆறு மணிக்கே ஹெவியா ஒரு பிடி பிடிச்சிருவேன். அதுக்கப்புறம் எதுவுமே சாப்பிட மாட்டேன். என்ன வசதின்னா, நைட் தூங்கப்போறதுக்கு முன்னாடியே எல்லாம் டைஜஸ்ட் ஆகிடும். இது ரொம்ப வருஷமாப் பழக்கம். மத்தபடி நாம ஆடுற குத்தாட்டத்துக்கே எல்லா எனர்ஜியும் போயிடும்ல’’ எனச் சிரிக்கிறார் விஜய்.

“நைஸ் டிப். நானும் ஆறு மணிக்கே சாப்பிடப் பார்க்கிறேன். என்ன இன்னும் ஒரு தடவை எக்ஸ்ட்ரா சாப்பிட வேண்டியிருக்கும், அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்’’ – ஜோக்கடிக்கிறார் விக்ரம்.

“அப்பப்போ பையனோட ஹோம்- ஒர்க் பண்ண உட்கார்வேன் விக்ரம். படிக்கிற காலத்திலேயே நமக்குக் கணக்கு வராது. இப்ப இருக்கிற சிலபஸைப் பார்த்தா, அது எல்.கே.ஜி, யு.கே.ஜியா இல்லே எம்.ஏ. எம்.எஸ்.சியான்னே புரிய மாட்டேங்குது. ஹெல்ப் பண்றேன்னு உட்கார்ந்து, நான் சொதப்ப ஆரம்பிச்சா, `எங்க அப்பாவுக்கு ஒண்ணுமே தெரியலை’ன்னு போறவங்க, வர்றவங்க எல்லார்ட்டயும் சொல்லிருவான். பசங்களைக் கவனிக்கப் பொறுமை வேணும்ல. மிஸஸ் விக்ரம் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். நிறைய சோஷியல் சர்வீஸ்லாம் பண்றாங்கன்னு…’’ என்றதும் விக்ரம் முகத்தில் புன்னகை.

விஜய் – விக்ரம்

“ஷைலா இல்லேன்னா, எங்கேயோ மாசச் சம்பளத்துக்கு வேலை பார்க்கிற கென்னியாவே என் வாழ்க்கை முடிஞ்சு போயிருக்கும் விஜய். என் கிராஃப் இன்ச் இன்ச்சா ஏறினது ஷைலாவால்தான். உலகம் எப்பவுமே என்கிட்டேயிருந்து மட்டும்தான் தொடங்குதுன்னு நினைச்ச என்னை, அது எதிர்ல இருக்கிற மனுஷங்ககிட்டேயிருந்து தொடங்குதுனு எனக்குப் புரியவெச்சது ஷைலா. டிரக் – அடிக்ட்டான மனுஷங்களுக்காக ரெகுலரா கவுன்சலிங் பண்றாங்க. ரோட்ல யாரையாவது `அய்யோ பாவம்’னு பார்த்துட்டா உடனே கையில் என்ன இருக்கோ, தூக்கிக் கொடுத்துடுவாங்க. `அவன் ஏமாத்துறாம்ப்பா’னு நான் சொன்னா, `ஏமாத்துறதுக்காக பிச்சை எடுக்கிற அளவு கீழே இறங்கிட்டார்ல. அதைவிட அவருக்கு பனிஷ்மென்ட் எதுவும் இல்லை. அவர் நம்மை ஏமாத்தலை. தன்னைத் தானே ஏமாத்திக்கிறார். அதுக்காக நாம நம்மால முடிஞ்சதைச் செய்யாம வரக் கூடாது’னு சொல்வாங்க. சினிமா வீட்டுக்குள்ள வரக் கூடாதுங்கிறதுல ரொம்ப உறுதியா இருப்பாங்க. அதே மாதிரி வீட்டையும் சினிமாவுக்குள்ள நுழைக்க மாட்டாங்க. ஓ.கே, இப்போ ஹானரபிள் சங்கீதா மேடத்தின் ஸ்பெஷல் என்னன்னு சொல்லுங்க விஜய்?’’ என விக்ரம் கேட்க, தொடர்கிறார் விஜய்.

“சங்கீதாவே ஸ்பெஷல்தான். எனக்கு நூறு மார்க் போடுவீங்கன்னா நான் ரெண்டு ஜீரோ. எனக்கு முன்னால் இருக்கிற ஒண்ணு சங்கீதா!. தொழில்ல எந்தக் கவலை இருந்தாலும் வீட்டுக்குள்ள போனா துளி கூட இருக்காது. அப்படியே சந்தோஷம் தொத்திக்கும். ரெண்டு நாள் அவங்க ஊர்ல இல்லேன்னாலே எனக்கு வாழ்க்கை `டல்’ அடிக்க ஆரம்பிச்சுடும். சினிமான்னாலும் சரி, வீட்லன்னாலும் சரி, என் காஸ்டியூமெல்லாம் அவங்க செலக்ஷன்தான். என் டேஸ்ட் என்னன்னு அவங்களுக்கு மட்டும்தான் தெரியும்.

“பாட்டு உங்க ஜீன்ல கலந்திருக்கு. உங்க அம்மாவே பெரிய சிங்கர். ஒரு பாட்டு பாடுங்க விஜய்’’ என்று விக்ரம் கோரிக்கை வைக்க, `ண்ணா, நீங்க காலேஜ்ல எனக்கு சீனியர்தான். அதுக்காக ராக்கிங் பண்றீங்களே… எனக்காக நீங்க ஒரு பாட்டு முதல்ல பாடுங்க’’ என விக்ரம் தொடுத்த அம்பை அவரிடமே திருப்பினார் விஜய்.

விஜய் – விக்ரம்

“உயிரே… உயிரே… வந்து என்னோடு கலந்துவிடு…’ – `பம்பாய்’ பாடலை உருகி உருகி, கண்கள் மூடி விக்ரம் பாடி முடிக்க, “ஹரிஹரன் சார்… ஆட்டோகிராஃப் ப்ளீஸ்’’ என்று விஜய் கேட்க, சிரிப்பில் அதிர்கிறது அறை. கை குலுக்கிப் பாராட்டுகிற விஜய்யைப் பாட அழைக்கிறார் விக்ரம்.

“இப்போது `என்னோட லைலா வர்றாளே ஸ்டைலா’ பாடலை விஜய் பாடுவார். இந்தப் பாடலை விஜய் ரசிகர்கள் மற்றும் சங்கீதா, சஞ்சய், திவ்யா ஷாஷா ஆகியோருக்கு டெடிகேட் செய்கிறேன்’’ என்று விக்ரம் கலாய்க்க, கலகலப்பாகப் பாட ஆரம்பிக்கிறார் விஜய்…

“நெஞ்சுல கூலா ஊத்துது கோலா, தாகமே அடங்கல அடங்கல…’’ – விஜய்யின் குரலுக்குத் தோதாக, டேபிளில் விக்ரமின் விரல்களும் விளையாட ஆரம்பிக்க, கச்சேரி… ஏ கிளாஸ்!

நிருபர்கள்: ரா.கண்ணன், த.செ.ஞானவேல் | படங்கள்: பொன்.காசி ராஜன், என்.விவேக்

Must Read

நாளை ராமர் கோவில் பூமி பூஜை – பிரதமர் மோடி பயணத்தின் முழு விவரம்!

முதலில் ஹனுமன் கார்ஹியில் மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி பின்னர் அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்கிறார்.

கணவன் கண் முன்னே கூட்டு பாலியல், ஆதரவு அளித்த போலீஸ்!

பாலியல் குற்றவாளிகளுக்கு போலீஸ் ஆதரவு அளித்து புகாரைப் பெற மறுத்து வந்த நிலையில், மலைவாழ் மக்கள் கூட்டாக முன்னெடுத்த போராட்டம் குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது...

“உடம்பெல்லாம் வலிக்குதுப்பான்னு அவன் அழறப்போ பயமா இருக்கும்”-  கண்ணீரில் மிதக்கும் சென்னை குடும்பம்!

மருந்தில்லா நோயும் வறுமையும் ஒரு வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தால்..? பூந்தமல்லியை அடுத்த செந்நீர் குப்பத்தைச் சேர்ந்த ரவீந்திரன் குடும்பம்போலதான் இருக்கும். எதிர் எதிரே இரண்டு பைக்குகள் வந்துவிட்டால், ஒரு வண்டி நின்றுதான் போக...

ஆபாசம், அச்சுறுத்தல், கொலை மிரட்டல்… பெண் ஊடகவியலாளர்களை குறிவைக்கும் கும்பல்!

தமிழ்நாட்டில் ஊடகத்தினர் மீதான தாக்குதலில் `சீஸன் டூ' ஆரம்பித்திருக்கிறது. ஊடகத் துறையில் இயங்கிவரும் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து சமீபகாலமாக அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சமூக ஊடகங்களில் இதுதொடர்பான குற்றச்சாட்டுகள், விவாதங்கள் என இரு...

TikTok-ஐ வாங்க மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தை… வாங்கினால் இந்தியாவில் என்ன செய்யலாம்? #VikatanPoll

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவைப் போலவே டிக்டாக் app-ஐ தடைசெய்யவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதே சமயம், அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட், டிக்டாக் app-ஐ சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கப்...