முகப்பு சினிமா 49 பந்துகள்... 82 ரன்கள்... ஓடி எடுத்தது 10 ரன்கள் மட்டுமே... சச்சின் ஓப்பனரான கதை!

49 பந்துகள்… 82 ரன்கள்… ஓடி எடுத்தது 10 ரன்கள் மட்டுமே… சச்சின் ஓப்பனரான கதை!

இந்த நாளில்தான் 2016 டி20 உலகக் கோப்பையில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிக்களுக்கிடையேயான லீக் போட்டி நடைபெற்றது. இந்திய அணிக்கு, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி வைத்த டார்க்கெட் 160. ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சிறிது நேரம்தான் தாக்குப் பிடித்தனர். ஆனால், தனியொருவனாக நின்று கோலி ஆடிய அதிரடி ஆட்டம், இந்திய அணியை அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறச் செய்தது. அன்று, கோலி 51 பந்துகளைச் சந்தித்து 82 ரன்களைக் குவித்திருந்தார். ஆனால், இந்த நாள் கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய நாளாக இடம்பெற, கோலியோ அவர் அடித்த 82 ரன்களோ காரணமில்லை. கோலி அடித்த அதே 82 ரன்களை, 22 ஆண்டுகளுக்கு முன்பாக இதே மார்ச் 27-ல் சச்சின் அடித்ததுதான் இந்த நாளை கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய நாளாக இடம்பெறச் செய்தது.

Sachin – kohli

2016-ல் நடந்த டி20 போட்டியில் கோலி 82 ரன்களைக் குவிக்க 51 பந்துகளை எடுத்துக்கொண்டார். ஆனால், சச்சின் எடுத்துக் கொண்டதோ 49 பந்துகள்தான்! அதுவும் 1994-ல் நடைபெற்ற ஒருநாள் போட்டி அது!

Also Read: கொரோனாவால் ட்ரெண்டாகும் கே.எஸ்.ரவிகுமார் படங்கள்! என்னங்க நடக்குது?

கோலியைவிட சச்சின் அதிரடி ஆட்டக்காரர் என்ற ஒப்பீட்டிற்காகவெல்லாம் இதைச் சொல்லவில்லை. 1990-களில், கிரிக்கெட்டில் அதிரடி என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். அன்றைய காலகட்டத்தில், ஒருநாள் போட்டிகளில் 300 ரன்களுக்கு மேல் ஒரு அணி குவித்துவிட்டால் அது அதிசயம். அதுவே ஒரு வீரர் 100-க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தால் அது அபூர்வம். பொறுமையாக செட்டிலான பின்பு ரன் சேர்க்க ஆரம்பிக்கும் அந்தக் காலகட்டத்தில், சச்சின் ஆடிய இன்னிங்ஸ் அற்புதம்! சச்சின் இது போன்ற பல அதிரடி இன்னிங்ஸ்களை ஆடியுள்ளார். ஆனால், இந்த இன்னிங்ஸ் ஏன் ஸ்பெஷல் என்ற கேள்விக்கு விடை தெரிந்துகொள்வதற்கு முன்பாக இன்னொரு கேள்வியை உங்கள் முன் வைக்கிறோம்.

இந்தக் கேள்வியை நீங்கள் வாசித்ததும் நிச்சயம் சச்சினின் முகம்தான் உங்களில் பலருக்கும் தோன்றியிருக்கும். உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களிடம் இந்தக் கேள்வியை முன் வைத்தால் 80 சதவிகிதம் பேர் சச்சின் என்ற பதிலைத்தான் சொல்வார்கள். ஆம்! அந்த சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ற பெருமைக்கு விதை போட்ட நாள் மார்ச் 27, 1994!

Sachin Odi stats

இது, 2000-களில் ஓப்பனிங் பேட்ஸ்மேனான சச்சின் அவுட் ஆன பிறகு பெரும்பாலானோர் வீடுகளில் சொல்லப்பட்ட ஒரு வாக்கியம். 1990-களில் சச்சின் ஓப்பனராக களமிறங்குவதற்கு முன்பும், “சச்சின் அவுட் ஆயிட்டாரு ரேடியோ கமென்ட்ரிய ஆஃப் பண்ணு” என்று சொல்லப்பட்டிருக்கும். காரணம், அந்தக் காலகட்டத்தில் சச்சின்தான் இந்திய அணியின் கடைசி ப்ராப்பர் பேட்ஸ்மேன். ஆம், 1994 மார்ச் 27-க்கு முன்பு வரை சச்சின் விளையாடிய 70 ஒருநாள் போட்டிகளிலும் 4 டவுன் 5 டவுன் 6 டவுன் ஆகிய பேட்டிங் பொஷிசன்களில்தான் ஆடியிருக்கிறார்.

Sachin in ODI

சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் புள்ளி விவரங்களை எடுத்துப் பார்த்தால், அவர் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 49 சதங்கள் அடித்துள்ளதாக இருக்கும். ஆனால், அவர் ஒருநாள் போட்டிகளில் ஓப்பனராக களமிறங்கத் தொடங்கியதிலிருந்து 8-வது போட்டியிலேயே சதமடித்துவிட்டார். ஒருவேளை முதல் போட்டியிலிருந்தே ஓப்பனராக ஆடியிருந்தால் இன்னும் பல சதங்களைக் கடந்திருப்பார் சச்சின்!

இந்திய அணி 1994-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தது. முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய அணியின் ஓப்பனர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக சச்சினை ஓப்பனிங் ஆட வைத்தார் அன்றைய இந்திய அணியின் கேப்டன் அசாருதீன். இது பற்றி ஒரு பேட்டியில் மனம் திறந்திருந்தார் அசாருதீன்…

Kapil dev-sachin-azharudeen

அந்தப் போட்டியில் ஓப்பனிங் இறங்குவதற்காகக் கெஞ்சியது பற்றி தன்னுடைய சுயசரிதையில் எழுதியுள்ளார் சச்சின். அதில், “நான் அப்போதைய அணியின் கேப்டன் அசாரிடமும், எங்கள் அணி மேனேஜர் அஜித் வடேகரிடமும் எனக்கு ஓப்பனிங் ஆட வாய்ப்பு தருமாறு கெஞ்சினேன். நான் ஏன் ஓப்பனிங் ஆட நினைத்தேன்? காரணம், ஒருநாள் போட்டிகளில், அன்றைய விதிமுறைகளின்படி முதல் 15 ஓவர்களில் 30 அடி சர்க்கிளுக்கு வெளியே குறைந்தே ஃபீல்டர்களே நிற்பார்கள். பெளலர்களை அட்டாக் செய்யும் திறமையும் பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பும் திறமையும் எனக்கு இருந்தது. எனவேதான் ஓப்பனிங் ஆட நினைத்தேன்” என்று சொல்லியிருந்தார் சச்சின். மேலும், இந்தப் போட்டிக்கு முன்பு நடந்ததைப் பற்றியும் அதே புத்தகத்தில் பின் வருமாறு கூறியிருந்தார்.

Sachin Autobiography

சச்சினின் நீண்ட கெஞ்சலுக்குப் பின் கிடைத்த அந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டார். ஒருவேளை அந்த வாய்ப்பை சச்சின் சரியாகப் பயன்படுத்தாமல் விட்டிருந்தால் கிரிக்கெட்டின் கடவுளாக சச்சின் மாறியிருக்கூட வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம். எனவே, அந்தத் தருணம் சச்சினுக்கு மட்டுமல்ல மொத்த கிரிக்கெட் உலகிற்கும் முக்கியமானது.

ஆனால், முழுமையாகவும் அப்படிச் சொல்லிவிடவும் முடியாது. சச்சினின் திறமைக்கு ஓப்பனிங் ஆடும் வாய்ப்பு எப்படியும் கிடைத்திருக்கும். ஆனால், சற்று தாமதமாகக் கிடைத்திருக்கும்.

Sachin

அந்த முக்கியமான போட்டியில் என்ன நடந்தது என்பதைப் பற்றி இந்த பத்தியில் பார்க்கலாம். நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றிருந்தது இந்திய அணி. இரண்டாவது போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 142 ரன்களுக்கு சுருண்டது. 143 என்ற இலக்கு, அவ்வளவு கடினமல்ல. ஆனால், போட்டி நடைபெற்றது எதிர் அணியின் சொந்த மண் என்பதால் இந்திய வீரர்களுக்குச் சற்று அழுத்தம் இருந்திருக்கலாம். ஆனால், சச்சினுக்கு முதல் முறை ஓப்பனராக இறங்குகிறோம் என்ற அழுத்தம்கூட இருந்ததாகத் தெரியவில்லை.

கிரீஸுக்கு வந்தது முதலே பெளலர்களைத் தாக்கத் தொடங்கினார். கிடைக்கும் கேப்புகளில் எல்லாம் பவுண்டரிகளை ஸ்கோர் செய்தார். மொத்தம் 15 பவுண்டரிகள். அன்றைய காலகட்டத்தில் நியூசிலாந்து அணியின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர் கவின் லார்சன் (Gavin Larsen). அவர் வீசிய பந்துகளில் இரண்டை சிக்ஸருக்கு பறக்கவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார் சச்சின்.

sachin tendulkar

பெளலர்களை பவுண்டரிகளிலேயே டீல் செய்த சச்சின், அன்று ஓடி எடுத்தது வெறும் 10 ரன்கள் மட்டுமே!

அந்தப் போட்டியில் விளையாடிய அனுபவம் பற்றியும் தனது சுயசரிதையில் சொல்லியிருப்பார் சச்சின், “ஓப்பனிங் ஆடுவது எனக்கு வித்தியாசமாக இருந்தது. இந்தியாவுக்கு ஓப்பனிங் ஆடுவது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு. கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் நம்பிக்கையை வீழ்த்திவிடக் கூடாது என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.” மேலும்…

சச்சின்

“இந்தப் போட்டிக்குப் பிறகு ஓப்பனிங் ஆடுவதற்காக அஜித் வடகேரிடம் நான் கெஞ்சவே இல்லை. அந்தத் தொடரில் மீதமிருந்த போட்டிகளில் நான் சிறப்பாகவே விளையாடியதால் ஓப்பனிங் பொஷிசன் எனக்கானதாகவே மாறிவிட்டது” என்று சச்சின் கூறியிருந்தார். மேலும், தனது இரண்டாவது இலக்கு பற்றியும் சச்சின் அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Also Read: ஹர்திக் பாண்டியாவின் சாதனையை அசால்டாக முறியடித்த ஆஸ்திரேலிய `லேடி தோனி’! #HBDAlyssaHealy

Sachin

ஒருவேளை சச்சினுக்கு ஓப்பனிங் ஆடும் வாய்ப்பு அன்றே கிடைக்காமல் போயிருந்தால், `அதிக ஒருநாள் சதங்கள் அடித்தவர்’ என்ற பெருமை வேறு யாரிடமாவது இருந்திருக்கக்கூட வாய்ப்பிருக்கிறது.

கடந்த ஆண்டு Linked in வலைதளத்தில் சச்சின் டெண்டுல்கர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் நியூசிலாந்து அணிக்கு எதிராக, தான் முதன்முதலாக ஓப்பனிங் ஆடிய அந்தப் போட்டி பற்றிக் கூறியிருந்தார். அந்தப் போட்டியை மையமாக வைத்து சில கருத்துகளையும் தன் ரசிகர்களுக்காகவும் இளைஞர்களுக்காகவும் பேசியிருந்தார் சச்சின். அதில் அவர் பேசியது பின் வருமாறு…

நியூசிலாந்துக்கு எதிரான அந்தப் போட்டிக்குப் பின் இந்திய அணியின் நிரந்தர ஓப்பனராக மாறினார் சச்சின். நீண்ட நாள்களுக்கு ஓப்பனராக இருந்த சச்சினை 4 டவுன் இறங்கி ஆடச் சொன்னார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி. 2002, 2003-ம் ஆண்டுகளில் சில போட்டிகளில் 3 டவுன் 4 டவுன் ஆகிய பேட்டிங் பொஷிசன்களில் ஆடியிருக்கிறார் சச்சின். அந்தக் காலகட்டத்தில் சேவாக், கங்குலி ஜோடி ஓப்பனிங் இறங்கியது.

2003-ம் ஆண்டு உலகக் கோப்பையில் சச்சின் ஓப்பனிங் ஆடினால்தான் அணி பேலன்ஸ் ஆகும் என்பதை உணர்ந்த கங்குலி, மீண்டும் சச்சினை ஓப்பனராக்கினார். அதன்பின் தான் ஓய்வு பெறும்வரை ஒருநாள் போட்டிகளில் ஓப்பனராகவே இருந்தார் சச்சின். ஓப்பனிங் தொடங்கி 7-வது பேட்டிங் பொஷிசன்வரை சச்சின் ஆடியிருந்தாலும் அவருக்குப் பிடித்தமானது ஓப்பனிங்கில் இறங்கி ஆடுவதுதான். அவருக்கு மட்டுமல்ல, ரசிகர்களும் அவரை ஓப்பனிங் பேட்ஸ்மேனாகப் பார்க்கத்தான் விரும்பினார்கள்.

Sachin Tendulkar ODI Runs By Batting Position

கிரிக்கெட்டில் ஓப்பனிங் இறங்கி ஆடுவது அவ்வளவு எளிதல்ல. அணியின் ஸ்கோர் என்னவாக இருக்கும் என்பதை நிர்ணயிப்பதில் ஓப்பனர்களின் பங்குதான் அதிகம். தனது அணிக்கு ஓப்பனிங் ஆட வேண்டுமென்பதற்காக வெட்கப்படாமல் கெஞ்சியதாலும், பயப்படாமல் பந்துகளை அடித்து நொறுக்கியதாலும்தான் சச்சின் என்கிற சகாப்தம் சாத்தியமானது. எனவே, மார்ச் 27 என்பது சச்சின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்குமே மறக்க முடியாத ஒரு நாள்!

உங்களுடைய ஃபேவரிட் சச்சின் இன்னிங்ஸை கமென்ட்டில் பகிர்ந்துகொள்ளுங்கள்!

Also Read: சச்சின் சாதனையை கோலி முறியடிக்கலாம்; ஆனால், ரோகித் சாதனையை? – கிரிக்கெட்டின் முரட்டு சாதனைகள்!

Must Read

ஊரடங்கு உத்தரவு மே 4ஆம் தேதி வரை நீட்டிப்பு? மோடி சொன்னது என்ன?

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இந்தியாவை மீட்டெடுக்கப் பிரதமர் மோடி கடந்த மார்ச் 24ஆம் தேதி நாட்டையே 21 நாட்கள் முடக்குகிறோம் என்றார். இதற்கு மக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். இந்த...

இந்தியாவில் இளைஞர்களைக் குறிவைக்கிறது கொரோனா… அரசு ஆய்வுகளே ஆதாரம்…

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போதும் சமூக தொற்றாக மாறவில்லை என்றும் அதற்கான அறிகுறிகள் தெரியவில்லை என்றும் மத்திய அரசு கூறி வருகிறது. இப்போதைய நேரத்தில் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிப்பிற்கு ஆளானவர்கள்...

உதவிக்கரம் நீட்டும் கார்பரேட் நிறுவனங்கள்!

சீனாவில் தொடங்கிய வைரஸ் பாதிப்பு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனாவின் பாதிப்புகள் குறைந்திருந்தாலும் இந்தியாவில் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா...

`ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடிக்கவில்லை… 50 பகுதிகள் அடைக்கப்படும்!’- திருச்சி மாவட்ட ஆட்சியர்

கொரோனா நடவடிக்கைகள் தொடர்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார், மாவட்ட ஆட்சியர் சிவராசு. அப்போது, “திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுத்திடவும், பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் பொதுமக்கள் நடமாட்டத்தைக்...

வீட்டு தோட்டத்துக்கான விதைகளை பெற்றுக் கொள்ளுங்கள்: விவசாய திணைக்களம் அறிவிப்பு

இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் covid -19 (கொரோனா) நோய் தொற்றுக் காரணமாக தொடர்ந்து வரும் நாட்களில் முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வாக சகலரும் வீட்டுத்தோட்டம் மேற்கொள்வது அவசியமாகிறது. அதற்கமைய...